மாலத்தீவில் சிறைபிடிக்கப்பட்ட விசைப்படகை மீட்டுத் தராவிட்டால் போராட்டம்: தூத்துக்குடி மீனவர்கள் அறிவிப்பு
தருவைக்குளத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தைக் கூட்டத்தில் பங்குத் தந்தை வின்சென்ட் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், தருவைகுளத்தைச் சேர்ந்த மைக்கேல் பாக்யராஜ் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த அக்டோபர் மாதம் 1 -ம் தேதி 12 மீனவர்கள் ஆழ் கடலில் மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் அரபிக்கடல் பகுதியில் மீன் பிடித்து விட்டு திரும்பிக் கொண்டிருக்கும்போது தவறுதலாக மாலத்தீவு கடற்பகுதிக்குள் நுழைந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு வந்த மாலத்தீவு கடற்படையினர் மாலத்தீவு கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாக விசைப்படகில் இருந்த 12 மீனவர்களையும் கடந்த அக்டோபர் 24 -ம் தேதி கைது செய்தனர். மேலும் படகையும் சிறைபிடித்தனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 12 மீனவர்களை மாலத்தீவு அரசு சில நாட்கள் கழித்து விடுவித்த நிலையில் அத்துமீறி மாலத்தீவு கடற்படைக்குள் நுழைந்து மீன்பிடித்ததாக கூறி படகிற்கு சுமார் 2 கோடியே 28 லட்சத்து 43 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
விசைபடகை அபராத தொகை இல்லாமல் அல்லது குறைந்த அபராத தொகையுடன் மீட்க தமிழக அரசு மற்றும் மத்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக தருவைகுளம் பகுதி மீனவர்கள் மற்றும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் தங்களது வாழ்வாதாரம் இதன் காரணமாக பாதிக்கப்படும் என கூறி கோரிக்கை விடுத்திருந்தனர்.
ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காதத் தொடர்ந்து தருவைகுளம் கிராம மீனவர்கள் நாளை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்து இருந்தனர். இதைத்தொடர்ந்து தருவைகுளம் பங்குத்தந்தை அலுவலகத்தில் இன்று சமாதான பேச்சுவார்த்தைக் கூட்டம் நடைபெற்றது.
பங்கு தந்தை வின்சென்ட் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், மீன்வளத் துறை இணை இயக்குநர் அமல் சேவியர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் மீனவ பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த பேச்சுவார்த்தையின்போது, படகை அபராதம் இல்லாமல் 20 நாட்களுக்குள் மீட்டு தர நடவடிக்கை எடுப்போம் என அதிகாரிகள் உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து, நாளை நடைபெற இருந்த சாலை மறியல் போராட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மீனவர்கள் குடும்பத்தினர் கூறுகையில், கடந்த 35 நாட்களாக படகை மீட்டு தராத காரணத்தினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம் என்றனர்.
மேலும், படகை மீட்டு தரக்கோரி மத்திய அமைச்சர் முருகன் மற்றும் கனிமொழி எம்பி ஆகியோரிடம் பலமுறை மனு அளித்துள்ளோம் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. 20 நாட்களுக்குள் படகை மீட்டு தராவிட்டால் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவோம் என பாதிக்கப்பட்டுள்ள மீனவர்களின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu