மாமன்னன் திரைப்படத்தை தடை செய்யாவிட்டால் போராட்டம்
தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த பிஎம்டி மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர்.
பரியேறும்பெருமாள், கர்ணன் ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் மாரி செல்வராஜ் மாமன்னன் என்ற திரைப்படத்தை இயக்கி உள்ளார். இந்தப் படத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், நடிகர் வடிவேலு, பகத் பாசில், நடிகை வடிவேலு உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்து உள்ள மாமன்னன் திரைப்படம் வருகிற 29 ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. படம் திரைக்கு வருவதற்கு முன்பே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. மேலும், பட பிரமோஷனின் போது ஜாதி கலவரம் ஏற்படும் வகையில் பல்வேறு சர்ச்சை கருத்துக்களை இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த நிலையில், தென் மாவட்டங்களில் ஜாதி கலவரத்தை ஏற்படுத்தக் கூடிய வகையில் படங்களை எடுத்து வரும் இயக்குநர் மாரி செல்வராஜ் மற்றும் படக்குழுவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இந்த படத்திற்கு தடை செய்ய வேண்டும் இல்லை என்றால் திரைப்படம் வெளிவரும் போது போராட்டம் நடத்தப்படும் என பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்கம் சார்பில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.
பி எம் டி மக்கள் பாதுகாப்பு இயக்க தலைவர் இசக்கி ராஜா தலைமையில் அளிக்கப்பட்ட மனுவில், மாமன்னன் படத்திற்காக வெளியிட்ட போஸ்டரில் மாமன்னன் என்ற பெயரில் அதன் கீழ் நாய் பன்றி படத்தை போட்டு இருப்பது மாமன்னர்கள் என்று அழைக்கப்படும் ராஜராஜ சோழன், பூலித்தேவன், மருது பாண்டியர் ஆகியோரை கொச்சைப்படுத்துவது போன்று அமைந்துள்ளது.
மேலும், மாமன்னனின் படம் குறித்த பிரமோசனங்களில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு வருவது தென் மாவட்ட மக்களிடம் மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளதாது. மாமன்னன் திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். இல்லையென்றால் போராட்டம் நடத்தப்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu