தூத்துக்குடியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்

தூத்துக்குடியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம்
X

தூத்துக்குடியில் பெண் ஆசிரியர் உள்ளிட்டோர் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தை சேர்ந்த ஆசிரியர்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான இடைநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நியமன ஒப்புதல் பள்ளி கல்வித்துறையால் வழங்கப்படாமல் உள்ளது.

இதன் காரணமாக 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக ஊதியம் இல்லாமல் பள்ளிகளில் பணிபுரியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக முதல்வரின் தனிப்பிரிவு மற்றும் பள்ளி கல்வித்துறை இயக்குநர் ஆகியோரிடம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள் சார்பில் பலமுறை மனு அளித்தும் இதுவரை பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு ஒப்புதல் வழங்காமல் பள்ளி கல்வித்துறை மற்றும் கல்வித் துறை அதிகாரிகள் இழுத்தடித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்த நிலையில், ஊதியம் இல்லாமல் 8 ஆண்டுகளாக பணிபுரிவதால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகக் கூறி தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண் ஆசிரியர்கள் உள்ளிட்ட ஆசிரியர்கள் தூத்துக்குடியில் இன்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் சார்பில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக அரசு மற்றும் பள்ளிக்கல்வித்துறை தங்களுக்கு உரிய பதில் தரும் வரை இந்த தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். மேலும், பணி நியமன ஒப்புதலுக்காக அதிகாரிகள் சிலர் பணம் கேட்பதாகவும் ஆசிரியர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ஆசிரியர்கள் போராட்டம் காரணமாக தூத்துக்குடியில் பரபரப்பு நிலவி உள்ளது.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது