அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்.. புதிய அறிவிப்பு வெளியீடு...

அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் யாரெல்லாம் இணையலாம்.. புதிய அறிவிப்பு வெளியீடு...
X

பைல் படம்

அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் பட்டதாரி இளைஞர்கள், தொழில்முறை படித்தவர்களும் இணைந்து கொள்ளலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் அஞ்சல் துறை சார்பில் அஞ்சல் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த முழு ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் 19 வயது முதல் 55 வயது வரையிலானவர்கள் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்சத் தொகை 20,000 ரூபாய் வரையிலும், அதிகபட்சமாக 50 லட்சம் ரூபாய் வரையிலும் பெற முடியும்.

இந்த காப்பீடுத் திட்டத்தில் இணைந்த பிறகு நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கடன் வாங்கிக் கொள்ள முடியும். 3 ஆண்டுக்கு பின்னர் சரண்டர் செய்தும் கொள்ளலாம். இந்த பாலிசியில் பாலிசிதாரரின் மரணத்திற்கு பிறகு, நாமினிக்கு, முதிர்வு தொகை கிடைக்கும்.

மேலும், எண்டோவ்மென்ட் பாலிசியினை (Santosh) பொறுத்தவரையில் பாலசிதாரர் முன்னரே தீர்மானிக்கப்பட்ட வயதை முதிர்ச்சியை அடையும் வரை, அதாவது 35, 40, 45, 50, 55, 58 மற்றும் 60 வயதை எட்டும் வரை, உத்திரவாத தொகை மற்றும் போனஸ் ஆகியவற்றிற்கு உத்தரவாதம் கிடைக்கிறது. ஒரு வேளை பாலிசிதாரர் இறந்துவிட்டால், நாமினிக்கோ அல்லது சட்டபூர்வ வாரிசுகளுக்கே போனஸூடன் முழு தொகையும் உறுதி செய்யப்படும்.

இந்த பாலிசியில் 19 - 55 வரையிலானவர்கள் இணைந்து கொள்ளலாம். இதில் குறைந்தபட்ச கவரேஜ் தொகை 20,000 ரூபாய் வரையிலும், அதிகபட்சம் 50 லட்சம் ரூபாய் வரையிலும் க்ளைம் செய்ய முடியும். இந்த பாலிசி போட்ட மூன்று ஆண்டிற்கு பிறகு கடன் வாங்கிக் கொள்ள முடியும். 3 ஆண்டிற்கு பின்னர் சரண்டர் செய்தும் கொள்ளலாம். இந்த பாலிசியிலும் போனஸ் உண்டு.

இந்த நிலையில், அஞ்சல் காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய, மாநில அரசு ஊழியர்கள் உள்ளிட்ட சிலர் மட்டுமே பயன்பெற முடியும் என்று இருந்த நிலையில், தற்போது, கூடுதலாக சில சலுகைகளை வழங்கி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளளது. இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பு விவரம் வருமாறு:

இந்திய அஞ்சல் துறை மக்களுக்கு பல பயனுள்ள சேவைகளை வழங்குவதில் எப்பொழுதும் முன்னிலை வகித்து வருகிறது. அந்த வகையில் இந்திய அஞ்சல் துறையில் உள்ள அஞ்சலக ஆயுள் காப்பீடு இயக்குநரகமானது தற்போது ஓர் அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

இது வரை அஞ்சல் காப்பீடு திட்டமானது மத்திய, மாநில அரசு அலுவலர்களுக்கும், பாதுகாப்பு துறை அலுவலர்கள், துணை ராணுவ அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பு சார்ந்த ஊழியர்கள், அரசு உதவி பெரும் கல்வி நிலைய ஊழியர்கள், பொது துறை நிறுவன ஊழியர்கள், நிதி நிறுவன ஊழியர்கள், தேசியமயமாக்கப்பட்ட வங்கி ஊழியர்கள், இந்திய ரிசர்வ் வங்கி ஊழியர்கள், தன்னாட்சி அமைப்பு சார்ந்த ஊழியர்கள், மத்திய மற்றும் மாநில அரசு அலுவலகங்களில் ஒப்பந்த அடிப்படையிலான ஊழியர்கள் மற்றும் அஞ்சல் துறையில் உள்ள புற நிலை ஊழியர்கள் பயனளிக்கும் வகையில் செயல் பட்டது.

தற்போது, அனைத்து பட்டதாரிகளும், டிப்ளமோ படித்தவர்களும் மற்றும் தொழில் முறை கல்வி பயின்றவர்களும் இந்தத் திட்டத்தில் இணைந்து பயன் பெறலாம். இந்திய அஞ்சல் துறை வழங்கும் அஞ்சல் காப்பீடு திட்டமானது ஆன்லைன் மூலமாகவும் பணம் செலுத்தும் வசதியும் கொண்டு உள்ளது. இந்தக் காப்பீடு பற்றிய மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள அஞ்சல் அலுவலங்களை அணுகலாம்.

அனைத்து பயனாளிகளும் இந்திய அஞ்சல் காப்பீடு திட்டத்தில் சேர்ந்து அதன் பயன்களை உபயோகப்படுதிக் கொள்ளலாம் என தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் சுரேஷ் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது