இன்று குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி

இன்று குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டும் பிரதமர் மோடி
X

PM Modi -பிரதமர் மோடி (கோப்பு படம்)

இன்று தூத்துக்குடி வருகை தரும் பிரதமர் மோடி குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கு அடிக்கல் நாட்டுகிறார்

பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். பல்லடம், மதுரை ஆகிய இடங்களில் நேற்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இரவில் அவர் மதுரையில் தங்கினார்.

இன்று புதன்கிழமை காலை 8.40 மணிக்கு மதுரை விமான நிலையத்தில் இருந்து ராணுவ ஹெலிகாப்டரில் தூத்துக்குடிக்கு புறப்படுகிறார். பிரதமர் மோடி காலை 9.30 மணிக்கு தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக வளாகத்தில் அமைக்கப்பட்டு உள்ள ஹெலிபேடில் வந்து இறங்குகிறார்.

அங்கிருந்து காரில் சென்று அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. பின்னர் நாட்டில் முடிவுற்ற பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டுகிறார்.

இதில் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ரூ.7 ஆயிரத்து 55 கோடியே 95 லட்சம் மதிப்பிலான வெளித்துறைமுகம், ரூ.265.15 கோடி மதிப்பில் வடக்கு சரக்கு தளம்-3 எந்திரமயமாக்கல், ரூ.124.32 கோடி மதிப்பில் 5 எம்.எல்.டி. கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், பசுமை ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் மையம் உள்ளிட்டவற்றுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.

இதேபோல் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்துக்கும் அடிக்கல் நாட்டுகிறார். மேலும் 10 மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அமைக்கப்பட்டு உள்ள 75 கலங்கரை விளக்கம், ரூ.1,477 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள வாஞ்சி மணியாச்சி-நாகர்கோவில் இரட்டை ரயில் பாதை, நாடு முழுவதும் ரூ.4,586 கோடி செலவில் முடிக்கப்பட்டு உள்ள தேசிய நெடுஞ்சாலைகளை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். ஒட்டு மொத்தமாக தூத்துக்குடியில் நடைபெறும் விழாவில் ரூ.17,300 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

தூத்துக்குடியில் அரசு விழாவை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி ஹெலிகாப்டரில் நெல்லைக்கு வருகிறார். பாளையங்கோட்டை ஜான்ஸ் பள்ளி மைதான ஹெலிபேடு தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது.

அங்கிருந்து குண்டு துளைக்காத கார் மூலம் பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் நடைபெறும் பா.ஜனதா கட்சியின் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றுகிறார். இதற்காக அங்கு பிரமாண்ட பந்தலும், கோவில் கோபுரம் போல் நுழைவுவாயிலும் அமைக்கப்பட்டு இருக்கிறது..

பிரதமர் வருகையையொட்டி நெல்லை, தூத்துக்குடியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். தூத்துக்குடி, நெல்லைக்கு வரும் பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக பல்வேறு இடங்களில் பா.ஜனதா கட்சியினர் கொடிக்கம்பங்கள், வரவேற்பு பேனர்கள், தோரணங்கள் வைத்து உள்ளனர்.

Tags

Next Story
why is ai important to the future