பிளஸ் 2 மாணவிக்கு அரிவாள் வெட்டு: போக்சோ சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்

பிளஸ் 2 மாணவிக்கு அரிவாள் வெட்டு: போக்சோ சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தல்
X

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்த விஸ்வ தமிழ் கழக அமைப்பினர்.

பிளஸ் 2 மாணவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடையவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடிஅருகே பிளஸ் 2 மாணவியை அரிவாளால் வெட்டிய வழக்கில் தொடர்புடையவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

தூத்துக்குடி அருகே உள்ள செக்காரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 வகுப்பு படித்து வந்த 18 வயது மாணவி ஒருவரை அவர் தேர்வு எழுதி விட்டு பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது, பள்ளி அருகே வைத்து இளைஞர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை கொண்டு தலையில் வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டார்.

மாணவியின் கூச்சல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு திரண்டனர். தலையில் பலத்த காயம் அடைந்த மாணவியை உடன் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர். பிளஸ் 2 மாணவி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காயமடைந்த மாணவிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிந்த தட்டப்பாறை போலீஸார் செக்காரக்குடி கிராமம் அருகே உள்ள பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்ற இளைஞரை கைது செய்தனர். இளைஞர் சோலையப்பன் மாணவியை ஒருதலையாக காதலித்து வந்ததாகவும், அவர் காதலிக்க மறுப்பு தெரிவித்தால் அரிவாளால் வெட்டியதும் போலீஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது.

போக்சோ சட்டத்தில் கைது

இந்த நிலையில், பிளஸ் 2 வகுப்பு மாணவியை அரிவாளால் வெட்டிய வாலிபர் சோலையப்பன் மற்றும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, விஸ்வ தமிழ் கழகத்தின் மாநிலத் தலைவர் சுடலைமுத்து தலைமையில் தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இன்று மனு அளிக்கப்பட்டது.

அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:

பிளஸ் 2 மாணவி அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள சோலையப்பனுக்கு மாணவி குறித்து தகவல் அளித்த அதே கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் என்ற வாலிபரையும் உடனடியாக கைது செய்ய வேண்டும். இரண்டு வாலிபர்கள் மீதும் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், தமிழகத்தில் பள்ளி மாணவிகள் உள்ளிட்ட பெண்கள் வெளியே வர முடியாத சூழ்நிலை உள்ளதாகவும், அதற்கு கண்டனத்தையும் தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்த சுடலைமுத்து, மாணவிகள் மற்றும் பெண்கள் பாதுகாப்பாக செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுடலைமுத்து கேட்டுக் கொண்டார்.

Tags

Next Story
மக்களே உஷார் ....! மழைக்காலத்துல பல நோய்கள் வருதாம் !... அத எதிர்கொள்ள உங்களுக்காக சில டிப்ஸ்....