தூத்துக்குடி அருகே பெட்ரோல் குண்டு வீச்சு: போலீஸார் நேரில் விசாரணை

தூத்துக்குடி அருகேயுள்ள மீனாட்சிபட்டியில் ஶ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மாயவன் விசாரணை மேற்கொண்டார்.
தூத்துக்குடி அருகே இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தியவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவிற்கு உட்பட்ட மீனாட்சிபட்டி பேருந்து நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை நேற்று இரவு நான்கு பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் சிலர், பெட்ரோல் குண்டு வீசி சேதப்படுத்தினர்.
இந்த சம்பவம் அருகில் உள்ள கோயிலில் வைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்தப் பகுதி சேர்ந்த மக்கள் இன்று காலை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி சாலையில் திரண்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஶ்ரீவைகுண்டம் காவல் துணைக் கண்காணிப்பாளர் மாயவன் தலைமையில், ஆய்வாளர் அன்னராஜ் உள்ளிட்ட போலீசார் பொதுமக்களோடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்தனர்.
இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலந்துச் சென்றனர். இந்நிலையில், தியாகி இமானுவேல் சேகரனார் மற்றும் வீரன் சுந்தரலிங்கம் ஆகியோரது திருவுருவ படங்களை சேதப்படுத்தியதாக அணியாபரநல்லூர் கிராமத்தை சேர்ந்த மற்றொரு சமுதாயத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனாட்சிபட்டி ஊர் தலைவர் ராஜகோபால் காவல் நிலையதத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் பரபரப்பான சூழல் நிலவியது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu