தூத்துக்குடி மாவட்டத்தில் 5 இடங்களில் மக்கள் களம் நிகழ்வு: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
மக்கள் களம் நிகழ்ச்சியில், பொதுமக்களிடம் இருந்து கனிமொழி எம்.பி. மனுக்களைப் பெற்றார்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் வட்டத்திற்குட்பட்ட சோழபுரம், கன்னக்கட்டை, புங்கவர்நத்தம், போடுபட்டி மற்றும் டி.சண்முகபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் களம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதாஜீவன், விளாத்திக்குளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேன் ஆகியோர் முன்னிலையில், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றார்.
மக்கள் களம் நிகழ்ச்சியின்போது, இரண்டு பயனாளிகளுக்கு ரூ. 2 லட்சம் விபத்து நிவாரணத் தொகைக்கான காசோலைகளையும், இரண்டு பயனாளிகளுக்கு ரூ. 4000 கல்வி உதவித்தொகைக்கான காசோலைகளையும், 5 பயனாளிகளுக்கு ரூ. 46 ஆயிரம் திருமண உதவித்தொகைக்கான காசோலைகளையும், 3 பயனாளிகளுக்கு ரூ. 60 ஆயிரம் இயற்கை மரண உதவித்தொகைக்கான காசோலைகளையும் கனிமொழி எம்.பி. வழங்கினார்.
மேலும், 64 பயனாளிகளுக்கு உழவர் பாதுகாப்பு உறுப்பினர் அடையாள அட்டைகளையும், 18 பயனாளிகளுக்கு பட்டா மாறுதல் உத்தரவுகளையும் என மொத்தம் 94 பயனாளிகளுக்கு ரூ. 3,10,000 மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 8 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ. 46,34,000 சுயதொழில் கடனுதவிகளையும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வழங்கினார்.
தொடர்ந்து, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:
மாவட்டத்தில் ஒவ்வொரு பகுதியாக சென்று பொதுமக்களை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கைகளை கேட்டறிந்து மனுக்களாக வாங்கி விரைவில் நடவடிக்கை எடுப்பதுதான் மக்கள் களம் நிகழ்ச்சி. கடைக்கோடி கிராமங்களில் வசித்து வரக்கூடிய நீங்கள் உங்கள் கோரிக்கை மனுக்களை கொடுக்க வேண்டுமென்று சொன்னால் சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்களுக்கு நேரில் சென்று கொடுக்க வேண்டும்.
ஆனால், இந்த மக்கள் களம் நிகழ்ச்சி வாயிலாக பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் என அனைவரும் நாங்களே உங்கள் கிராமத்திற்கு நேரில் வந்து உங்களிடம் மனுக்களை பெற்று அதனை உடனடியாக பரிசீலனை செய்து விரைவாக நடவடிக்கை மேற்கொள்வது தான் இந்த மக்கள் களம் நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும்.
அந்த வகையில், 33 ஆவது கிராமமாக சோழபுரம், 34 ஆவது கிராமமாக கன்னக்கட்டை, 35 ஆவது கிராமமாக புங்கவர்நத்தம், 36 ஆவது கிராமமாக போடுபட்டி, 37ஆவது கிராமமாக டி. சண்முகபுரம் ஆகிய கிராமங்களில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுள்ளோம்.
மக்கள் களம் நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்களிடம் இருந்து பெறக்கூடிய அனைத்து மனுக்களையும் பரிசீலனை செய்து தகுதியான மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என, தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu