கோவில் திருவிழா விவகாரம்: தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் கிராம மக்கள் முற்றுகை
தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகே உள்ளது வைத்தியலிங்கபுரம் கிராமம். இந்த கிராமத்தில் விஸ்வகர்மா சமுதாயத்திற்கு சொந்தமான உச்சிமாகாளி மற்றும் பட்டறை அம்பாள் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் திருவிழா கடந்த எட்டாம் தேதி நடைபெற்றது.
அப்போது திருவிழாவை நடத்த விடாமல் அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் கிராம மக்களிடம் கோவில் திருவிழாவை நிறுத்த கோரி தகராறில் ஈடுபட்டனராம். மேலும், பெண்கள் உள்ளிட்ட சிலரை தாக்கியும் ஆபாசமாக பேசிதாகவும் கூறப்படுகிறது. மேலும் இதே போன்று தொடர்ந்து கோயிலில் நடைபெறும் விழாக்களில் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக வைத்தியலிங்கபுரம் கிராம மக்கள் கோவில் நிர்வாக கமிட்டியினர் உடன்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால், காவல்துறையினர் கோவில் நிர்வாக கமிட்டியினர் மற்றும் கிராம மக்கள் பத்துக்கும் மேற்பட்டோர் மீது வழக்கு பதிவு செய்ததுடன் தகராறில் ஈடுபட்ட நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து இதுவரை கைது செய்யாமல் உள்ளனராம். இதற்கு கிராம மக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், வைத்தியலிங்கபுரம் கிராம மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். கோயில் திருவிழாவில் தகராறு செய்து வருவோரை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். இந்தப் போராட்டம் காரணமாக தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பின்னர், கிராம மக்கள் கோரிக்கையை வலியுறுத்தி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu