Pensioners Digital Life Certificate ஓய்வூதியர்களுக்கு வீடு தேடி வரும் டிஜிட்டல் உயிர்வாழ் சான்று.. முழு விவரம் இதோ…
Pensioners Digital Life Certificate
தமிழக அரசு பணிக்கால ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் வீட்டிலிருந்தபடியே தங்களது உயிர்வாழ் சான்றிதழை டிஜிட்டல் முறையில் தபால்காரர்கள் மூலம் சமர்ப்பிப்பதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது. இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும் இந்திய அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக்கும் இடையே கையெழுத்தாகி உள்ளது.
இதுகுறித்து தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீத்தாரப்பன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மூவாயிரத்துக்கும் மேலான தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்கள் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டியுள்ளது. இந்நிலையில் நேரில் சென்று உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்க ஓய்வூதியதாரர்கள் படும் சிரமங்களை தவிர்க்கும் விதமாக அஞ்சல் துறை சிறப்பு ஏற்பாடு செய்துள்ளது.
அதாவது, அஞ்சல் துறையின் கீழ் செயல்படும் “இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் வங்கி" ஓய்வூதியதாரர்களின் வீட்டு வாசலிலேயே பயோமெட்ரிக் முறையை பயன்படுத்தியும் இ-முக அடையாளம் வைத்தும், டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழ் (ஜீவன் பிரமான்) சமர்ப்பிக்க ஏற்பாடு செய்துள்ளது. இதற்கு சேவை கட்டணமாக ரூ. 70 தபால்காரரிடம் செலுத்த வேண்டும்.
ஓய்வூதியதாரர்கள் தங்கள் பகுதி தபால்காரரிடம் ஆதார், மொபைல் எண், பிபிஓ எண் மற்றும் ஓய்வூதிய வங்கி கணக்கு விவரங்களை தெரிவித்து கைவிரல் ரேகை பதிவு செய்தால் ஒரு சில நிமிடங்களில் டிஜிட்டல் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பிக்க முடியும். கடந்த ஆண்டு சுமார் 1.75 லட்சம் தமிழக அரசு ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் வீட்டில் இருந்தபடியே தங்களது உயிர்வாழ் சான்றிதழை தபால்காரர்கள் மூலம் சமர்ப்பித்து உள்ளனர்.
இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி தூத்துக்குடி மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட அஞ்சலகங்கள் மூலமாகவும், ஸ்மார்ட் போன்கள் மற்றும் பயோமெட்ரிக் சாதனங்கள் வழங்கப்பட்டுள்ள 450-க்கும் மேற்பட்ட தபால்காரர்கள் மற்றும் கிராம அஞ்சல் ஊழியர்கள் மூலமாகவும் சேவைகளை வழங்கி வருகின்றது.
எனவே, தமிழக அரசு ஓய்வூதியம் பெறுவோர், குடும்ப ஓய்வூதியதாரர்கள் இந்த வசதியைப் பயன்படுத்தி வீட்டில் இருந்த படியே தங்கள் பகுதி தபால்காரரிடம் உயிர்வாழ் சான்றிதழை சமர்ப்பித்து பயன்பெறலாம் என தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் (பொறுப்பு) தீத்தாரப்பன் கேட்டுக் கொண்டுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu