ஓட்டப்பிடாரத்தில் வஉசி சிலைக்கு மாவட்ட ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை
ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வ.உ.சிதம்பரனார் திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 152 ஆவது பிறந்த நாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு சார்பில் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் அமைந்துள்ள வஉசி சிதம்பரனார் நினைவு இல்லத்தில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர், வ.உ.சிதம்பரனாரின் கொள்ளுப்பேத்தி செல்விக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அதனைத்தொடர்;ந்து வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு புகைப்படங்களை ஆட்சியர் செந்தில்ராஜ் பார்வையிட்டார். நிகழ்ச்சியில், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா, மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிறிஸ்டி பாய், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் நவீன் பாண்டியன், ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய தலைவர் ரமேஷ், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் சுரேஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடி மாவட்டத்தில் 1872 செப்டம்பர் 5 ஆம் தேதி ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி அவர்கள் பிறந்தார். அவரது தந்தை பெயர் உலகநாதபிள்ளை, தாயார் பரமாயி அம்மையார். ஓட்டப்பிடாரத்தில் நடுத்தர கல்வியை முடித்த வ.உ.சி. தூத்துக்குடியில் உயர்நிலைக் கல்வியில் தேர்ச்சி பெற்ற பின்னர் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராகப் பணிபுரிந்தார்.
பின்னர், பிப்ரவரி 1894 ஆம் ஆண்டில் திருச்சியில் சட்டக்கல்வி பயின்றார். 1900 -இல் தூத்துக்குடியில் வழக்கறிஞராகப் பணி தொடங்கினார். 1905 மே திங்களில் பாண்டித்துரை சாமித்தேவர் என்பவரை தலைவராக கொண்ட மதுரை தமிழ்ச்சங்கத்தில் உறுப்பினரானார். ஆங்கிலேயர்கள் இந்தியாவில் வணிகம் செய்ய வந்து இந்திய ஆட்சியைக் கைப்பற்றி இந்திய நாட்டின் செல்வங்களை கொள்ளையடித்துக் கொண்டிருந்தது வ.உ.சி. அவர்களை கடுமையாகப் பாதித்தது.
அவர் தனது எதிர்ப்பைத் தெரிவிக்க ஆங்கிலேயர்களின் வணிகத்தையே முதலில் எதிர்த்தார். வ.உ.சி. 1906 ஆம் ஆண்டு அக்டோபர் 16 ஆம் நாள் ‘சுதேசி நாவாய்ச் சங்கம்" என்ற கப்பல் நிறுவனத்தைப் பதிவு செய்தார். டிசம்பர் 1906 -இல் கப்பல்கள் வாங்குவதற்கு பம்பாய் சென்று திலகர் உதவியுடன் கப்பல்கள் வாங்கி வந்தார். எஸ்.எஸ். காலியோ, எஸ்.எஸ்.லாவோ ஆகிய கப்பல்கள் இயக்கப்பட்டன. ஆங்கிலேயர்களால் சுதேசி கப்பல் நிறுவனத்தின் வளர்ச்சியை தடுக்க இயலவில்லை. இதுபோன்ற ஒரு தேசப்பற்று மிகுந்த ஒரு மாமனிதரின் பிறந்த நாள் விழாவில் அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ததை மிகப் பெருமையாக உணர்கிறேன் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu