தெலங்கானா, புதுச்சேரி மாநிலங்களில் விநாயகர்சதுர்த்தி விழாவுக்கு தடை இல்லை
தூத்துக்குடியில் பேட்டியளித்த தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்
இளைஞர்கள் சுதந்திர போராட்ட வீரர்களுக்கு ரசிகர்களாக மாற வேண்டும் என்றார் தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்.
கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் 150 -ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் அவரது நினைவு இல்லத்தில் உள்ள உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவருடைய வாழ்க்கை வரலாற்றை விளக்கும் புகைப்படக்கண்காட்சியை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், "இந்திய சுதந்திரத்திற்காக போராடிய மரியாதைக்குரிய வ.உ.சிதம்பரனார் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இளைஞர்கள் எல்லா சுதந்திரப் போராட்ட வீரர்களின் வரலாறுகளையும் படியுங்கள். சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு ரசிகர்களாகவும் மாறுங்கள். அன்று சுதந்திரத்திற்காக போராடி தியாகம் செய்யவில்லை என்றால் இன்று நாம் சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டிருக்க முடியாது.
பாரத பிரதமர், இந்தியாவின் 75-ஆவது ஆண்டு சுதந்திர தின விழாவை, ஓராண்டு முழுவதும் கொண்டாட வேண்டுமென கூறியுள்ளார்.குறைந்தபட்சம் 75 சுதந்திர போராட்ட வீரர்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் வேலை செய்த இடங்கள், படித்த இடங்கள் அவருடைய போராட்டங்கள் குறித்து செய்திகளை தேடித்தேடி இளைஞர்கள் படிக்க வேண்டும். மண்ணுக்காக போராடியவர் மண்ணெண்ணெய் விற்று கடனாளியாகி வறுமையில் உயிரிழந்தார் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். மொழிக்காகவும் நாட்டுக்காகவும், சமூகத்திற்காகவும் பாடுபட்டுக் கொண்டிருக்கும் தலைவர்களை, நாம் இருக்கும் காலம் வரை ஒவ்வொருவரும் போற்ற வேண்டும். தமிழகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாட அனுமதி மறுக்கப்பட்டுள்ளதில் அரசியல் இருகிறதா இல்லையா என நான் கருத்துக்கூற முடியாது. ஆனால், நான் ஆளுநராக உள்ள 2 மாநிலங்களிலும் விநாயகர் சதுர்த்தி விழா நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது என்றார் தமிழிசை சவுந்தரராஜன்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu