கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரம் : அமைச்சர் பேட்டி
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கனிமொழி எம்பி தலைமையில் சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அரசு அதிகாரிகள் இணைந்து செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக தூத்துக்குடி ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் கொரோனா நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் இன்று தனியார் மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு கனிமொழி எம்பி தலைமை தாங்கினார். கூட்டத்தில் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், வருவாய் அலுவலர் கண்ணப்பன் உள்பட சுகாதார துறை அலுவலர்களும் கலந்து கொண்டு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
இதையடுத்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கொச்சியில் இருந்து 3 படகுகளில் ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நாகப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் புயல் எச்சரிக்கையை தொடர்ந்து கரை திரும்பும் நேரத்தில் கடல் சீற்றம் காரணமாக சிக்கிக்கொண்டனர். இதில் இரண்டு படகில் சென்ற மீனவர்கள் அருகே உள்ள தீவில் கரையேறி உள்ளனர். மேலும் ஒரு படகு சீற்றம் காரணமாக கடலுக்குள் கவிழ்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதில் சென்ற 9 மீனவர்கள் கடலில் மாயமாகியுள்ளனர்.
மாயமான மீனவர்களை தேடும் பணியில் இந்திய கடலோர காவல் படை விமானப் படை ஆகியவை ஈடுபட்டு வருகின்றது. கடற்படையைச் சேர்ந்த ஹெலிகாப்டர்களும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தீவில் கரையேறி உள்ள மீனவர்கள், தாங்களும் மாயமான மீனவர்களை தேடும் பணியில் ஈடுபட அனுமதி அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததன் அடிப்படையில் கடல் சீற்றம் குறைந்த பின்னர் அவர்களும், கடற்படையோடு சேர்ந்து தேடுதல் பணியில் ஈடுபடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்த காலகட்டத்தில் மீனவர்களை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு முதற்கட்ட நிவாரணமாக ரூ 50,000 திமுக சார்பில் வழங்கப்பட்டுள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu