தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணப் பொருட்களை முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.
கடந்த 17 மற்றும் 18 ஆம் தேதிகளில் பெய்த கனமழையில் தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இயல்வு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்த வெள்ளநீர் தற்போது வடிந்து இயல்பு நிலை திரும்பி வருகிறது.
இந்த நிலையில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அதிமுக தூத்துக்குடி வடக்கு மாவட்டம் சார்பில், ஓட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி, இந்திரா காலனி, காமராஜ் நகர் மாதாங்கோயில் தெரு, நாணல்காடு, கிராமத்தில் அ.தி.மு.க. கொள்கை பரப்பு துணைச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன் ஏற்பாட்டில் 2000 பேருக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரிசி, பருப்பு, ரஸ்க், பிஸ்கட் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வழங்கி. முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விவசாயப் பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
நூறு ஆண்டுகளுக்கு மேல் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்த மழையால் தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பாதித்தது. குறிப்பாக, தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர், ஏரல், சாத்தான்குளம் வட்டாரப் பகுதிகள் அதிகளவில் பாதிக்கப்பட்டது.
இன்னும் பல்வேறு இடங்களில் மழைநீர் வடியவில்லை. ஆனால், அதை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. ஆனால் முன்னாள் முதல்வரும் அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி நேரடியாக களத்துக்கு வந்து மக்களோடு நின்றார். தற்போது மக்கள் கொந்தளிப்பில் இருக்கிறார்கள். அறிவிக்கப்பட்ட நிவாரணம் ரூ. 6000 என்பது போதாது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குடிமராமத்து பணி என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்து குளங்கள் தூர்வாரப்பட்டது. ஆனால் தி.மு.க. ஆட்சியில் காழ்ப்புணர்ச்சி காரணமாக அந்தத் திட்டத்தை கிடப்பில் போட்டுள்ளனர்.
அந்தத் திட்டத்தை தொடர்ந்து இருந்தால் இந்த பேரழிவு நடந்திருக்கிறது. முறையாக குளங்களை தூர் வாரி இருந்தால் இந்த இழப்பை சந்திக்க தேவையில்லை. மாநிலத்தில் உள்ள தி.மு.க. ஆட்சி கண்டும் காணாமல் இருப்பது போல் இல்லாமல் மத்திய அரசு இந்த மக்களை காப்பத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu