கடலில் மாயமான மீனவர்களுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை: அனிதா ராதாகிருஷ்ணன்
தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு மாவட்டம் முழுவதும் தடுப்பூசி முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் முகாம் இன்று நடைபெற்றது. இந்த முகாமில் கனிமொழி எம்பி, தமிழக மீன்வளத்துறை மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், மாவட்ட வருவாய் அதிகாரி கண்ணபிரான், தூத்துக்குடி மருத்துவ பணிகள் மற்றும் சுகாதாரத்துறை துணை இயக்குனர் போஸ்கோ ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முகாமில் 45 வயது மேற்பட்டோருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி கனிமொழி எம்பி முன்னிலையில் தொடங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், கொரோனா பரவலை தடுப்பதற்காக ஆயிரத்து 886 கிராமங்களில் 36 சுகாதார பணி குழுக்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு தொடர்பாக ஒரு நபர் ஆணையம் தமிழக முதலமைச்சரிடம் இடைக்கால அறிக்கையை தாக்கல் செய்துள்ளது. இந்த அறிக்கையினை ஆய்வு செய்த பின்னர் அதில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கல்வித் தகுதியின் அடிப்படையில் வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து வருகின்றனர். திமுக தலைவரும் தமிழக முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் மக்களுக்கு அளித்த வாக்குறுதியின்படி நிச்சயம் அந்த கோரிக்கையும் பரிசீலிக்கப்பட்டு நிறைவேற்றி தர நடவடிக்கை எடுக்கப்படும். ஆக்ஸிஜன், உயிர்காக்கும் மருந்துகளை கள்ளச்சந்தையில் விற்றால் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது என்றார்.
இதைத்தொடர்ந்து மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களிடம் பேசுகையில், கொச்சி துறைமுகத்தை தங்குதளமாக கொண்டு நாகப்பட்டினத்தை சேர்ந்த 10 மீனவர்கள் மூன்று படகுகளில் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். புயல் எச்சரிக்கையை தொடர்ந்து அவற்றில் இரண்டு படகுகள் கரை திரும்பி விட்டன. ஒரு படகு மட்டும் கரை விரும்பாமல் கடலுக்குள் கவிழ்ந்ததாக தகவல் கிடைத்துள்ளது. அதில் சென்ற மீனவர்களை உயிருடன் மீட்கும் பொருட்டு பணிகளை துரிதப்படுத்த பட்டுள்ளன. கடலோர காவல்படை மற்றும் விமானப் படையின் உதவி கோரப்பட்டு மீனவர்களை தேடும் பணி நடைபெற்று வருகிறது. மீனவர்களை உயிருடன் மீட்பதற்காக அண்டை மாநில அரசுகளுக்கும் தகவல் கொடுக்கப்பட்டு உள்ளது. எனவே கடலுக்குள் தத்தளிக்கும் மீனவர்கள் எங்கு கரையேறினாலும் அவர்களுக்கு தேவையான உதவிகள் செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் புயல் காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து நிவாரணம் வழங்கும் பணிகள் இன்று நடைபெற உள்ளது என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu