தூத்துக்குடியில் மோசடி வழக்கில் கைதானவருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை
தூத்துக்குடி மாவட்டம், நாரைக்கிணறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட என். புதூர் பகுதியைச் சேர்ந்த தமிழ்செல்வன் என்பவரது மனைவி உலகாண்ட ஈஸ்வரி (42) என்பவரிடம் அவரது உறவினரான கோவில்பட்டி முத்துநகரைச் சேர்ந்த ஆறுமுகநயினார் மகன் முத்துராமலிங்கம் (42) என்பவர் பரிகார பூஜை செய்ய வேண்டும் என கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து, கடந்த 14.04.2021 அன்று உலகாண்ட ஈஸ்வரி வீட்டில் வைத்து முத்துராமலிங்கம் பரிகார பூஜை செய்து உலகாண்ட ஈஸ்வரியின் 6 ½ பவுன் தங்க நகைகளை துணியால் மூடப்பட்ட ஒரு பாத்திரத்தில் வைக்க சொல்லி உலகாண்ட ஈஸ்வரிக்கு தெரியாமல் அந்த தங்க நகைகளை எடுத்துக் கொண்டு, அதே பாத்திரத்தில் ஒரு கல்லை வைத்து விட்டு பரிகார நாட்கள் முடியும் வரை பாத்திரத்தை திறக்க கூடாது என்று கூறி தங்க நகைகளை மோசடி செய்து ஏமாற்றி உள்ளார்.
இந்த வழக்கில் நாரைக்கிணறு காவல் நிலைய போலீசார் முத்துராமலிங்கத்தை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரணை செய்த அப்போதைய நாரைக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் தர்மர் புலன் விசாரணை செய்து கடந்த 13.10.2021 அன்று நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கின் விசாரணை ஓட்டப்பிடாரத்தில் உள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயந்தி குற்றம்சாட்டப்பட்ட முத்துராமலிங்கத்துக்கு மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூபாய் 10,000/- அபராதமும் விதித்து இன்று தீர்ப்பு வழங்கினார்.
இந்த வழக்கை சிறப்பாக புலனாய்வு செய்த அப்போதைய நாரைக்கிணறு காவல் நிலைய ஆய்வாளர் தர்மர், குற்றம்சாட்டப்பட்டவருக்கு தண்டனை பெற்றுத்தர நீதிமன்றத்தில் திறம்பட வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர் முருகேசன் மற்றும் விசாரணைக்கு உதவியாக இருந்த முதல் நிலை காவலர் பெருமாள் ஆகியோருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பாராட்டு தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu