தூத்துக்குடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 52 வீடுகள் திறப்பு
தூத்துக்குடி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் திறக்கப்பட்ட கல்வெட்டு அருகில் மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகள்.
பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், வேலூர் மாவட்டம். மேல்மொணவூர், இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாமில் நடைபெற்ற விழாவில், தூத்துக்குடி மாவட்டம் தாப்பாத்தியில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் 2 கோடியே 60 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 52 வீடுகளை காணொளி காட்சி வாயிலாக முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து தாப்பாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பயனாளிகளிடம் வீடுகளை ஒப்படைத்தார். தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் கடந்த 2021-22 சட்டமன்ற கூட்டத் தொடரின்போது பேரவையில் முகாம் வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு இனி பாதுகாப்பான. கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை அமைத்து தருவதை அரசு உறுதி செய்யும் என்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர பணக்கொடை. துணிமணிகள், பாத்திரங்கள். கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்களை உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் என அறிவித்ததுடன், இலவச சமையல் எரிவாயு இணைப்பு. அடுப்பு மற்றும் சமையல் குழுக்களுக்கு சமுதாய எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர்களது முகாம்களில் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனவும் அறிவித்திருந்தார். அவற்றில் முதற்கட்டமாக, 3510 வீடுகள் புதிதாக கட்டித்தரப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு, அதற்காக ரூ.176.02 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதன் தொடர்ச்சியாக இலங்கைத் தமிழர் முகாம்களில் புதிய வீடுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் கட்டப்பட்டு வருகிறது. அவற்றில், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாப்பாத்தி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் ரூ. 2.60 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 52 வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் இலங்கைத் தமிழர் முகாம்களில் குடிநீர், மின்சாரம், கழிப்பிடம் மற்றும் சாலை வசதிகள் புதிதாகவும் ஏற்கெனவே உள்ளவற்றை உடனுக்குடன் சீர்படுத்தியும் தரப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி, இந்த முகாமில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 11.97 லட்சம் மதிப்பீட்டில் புதிய அங்கன்வாடி கட்டிடமும், 52 புதிய வீடுகளுக்கு ரூ. 4.11 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீட்டு குடிநீர் இணைப்புகளும், ரூ. 4.99 லட்சம் மதிப்பீட்டில் 21 தெரு விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த முகாமில் ஓரடுக்கு கற்சாலை ரூ. 12.23 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. முகாமிற்கு புதிய வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகள் பணிகளுக்காக தற்போது ரூ. 2.93 கோடி மதிப்பீட்டுத் தொகையில் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது.
மேலும், இந்த முகாமில் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப் பள்ளியில் 93 மாணவ, மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். 93 மாணவ, மாணவிகளும் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் பயன்பெறுகின்றனர் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், கோவில்பட்டி வருவாய் கோட்டாட்சியர் ஜேன் கிருஸ்டிபாய், தனி வட்டாட்சியர் இலங்கை தமிழர் மறுவாழ்வுத்துறை சுமதி, தாப்பாத்தி ஊராட்சி மன்ற தலைவர் பெருமாளம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu