தூத்துக்குடி தொகுதியில் 54 சதவீதம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு

தூத்துக்குடி தொகுதியில் 54 சதவீதம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண் இணைப்பு
X

தூத்துக்குடி மாநகாரட்சி ஆணையர் தினேஷ்குமார். (கோப்பு படம்).

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில், 54 சதவீதம் பேர் மட்டுமே வாக்காளர் பட்டியலுடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர்.

தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி தேர்தல் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான தினேஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியலில் ஒரு வாக்காளரின் விபரங்கள் ஒரே தொகுதியில் இருவேறு இடங்களில் இடம்பெறுதல் அல்லது ஒரு வாக்காளரின் விபரங்கள் இரு அல்லது பல்வேறு தொகுதிகளில் இடம்பெறுதலை தவிர்க்கவும் மற்றும் வாக்காளர் பட்டியலினை 100 சதவீதம் சரியாக்கவும் வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணினை இணைக்க அறிவுறுத்தி உள்ளது.

இந்தப் பணி கடந்த 01.08.2022 முதல் தொடங்க ஆணையிட்டதன் அடிப்படையில் தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியிலும்; அந்தப் பணியானது 01.08.2022 முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று படிவம் 6பி பூர்த்தி செய்து ஆதார் எண் விபரங்களை பெற்று வாக்காளர் அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

தற்போது வரை தூத்துக்குடி சட்டமன்ற தொகுதியில் 54 சதவீத வாக்காளர்கள் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணுடன் ஆதார் எண்ணை இணைத்து உள்ளனர். இதனை தொடர்ந்து வாக்காளர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் ஆதார் எண்ணினை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க செப்டம்பர் 9 ஆம்தேதி (சனிக்கிழமை) மற்றும் 10.09.2023 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய நாட்களில் சிறப்பு முகாம் நடத்தி படிவம் 6பி மூலம் ஆதார் எண் வாக்காளர்களிடம் இருந்து பெற்று வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை எண்ணுடன் இணைக்கும் பணி நடைபெற உள்ளது.

எனவே, வாக்காளர்கள் அனைவரும் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்க்கப்படுகிறது. வாக்காளர்களும் தாங்களாகவே நேரடியாக தங்களது ஆதார் எண் விபரங்களை Voters Helpline App என்ற செல்போன் செயலி மூலம் அல்லது NVSP என்ற இணையதளம் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். செல்போன் செயலியை Google Play Store- இல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி அலுவலர் மற்றும் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story
ai in future agriculture