தூத்துக்குடி மாவட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் நாள் விவரம் அறிவிப்பு
மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறும் நாள் விவரம் அறிவிப்பு (கோப்பு படம்)
தமிழகத்தில் மின்சார விநியோகத்தில் ஏற்படும் குறைபாடுகள், மின்கட்டணம் தொடர்பான புகார்கள் உள்ளிட்ட மின்சார வாரியம் தொடர்பாக பொதுமக்கள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றை மின்வாரிய அலுவலகங்களில் தெரிவித்து சரி செய்து கொள்ளலாம்.
இருப்பினும், ஒரே நேரத்தில் அதிகளவு கூட்டம் மற்றும் சேவை குறைபாடுகள் குறித்து புகார் தெரிவித்தால் அதன் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் தாமதம் என தொடர்ந்து புகார்கள் எழுந்து வந்ததால் அனைத்து மாவட்டங்களிலும் மாதம்தோறும் குறைதீர் கூட்டம் நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் மாதத்தில் மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இதுகுறித்து தூத்துக்குடி மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் குருவம்மாள் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மின்நுகர்வோர்கள் சார்ந்த குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாதம் தோறும் கோட்ட அளவில் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, அக்டோபர் 3 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செந்தூர் கோட்டத்துக்கு உட்பட்ட திருச்செந்தூர் உதவி பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
அக்டோபர் 10 ஆம் தேதி தூத்துக்குடி நகர்ப்புற கோட்டத்துக்கு உட்பட்ட புளியம்பட்டி உதவி பொறியாளர் அலுவலகத்திலும், அக்டோபர் 17 ஆம் தேதி கோவில்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட கோவில்பட்டி கிழக்கு உதவி பொறியாளர் அலுவலகத்திலும் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
இதேபோல அக்டோபர் 31 ஆம் தேதி தூத்துக்குடி ஊரக கோட்டத்துக்கு உட்பட்ட செய்துங்கநல்லூர் உதவி பொறியாளர் அலுவலகத்திலும் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடக்கிறது. எனவே, மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் இந்த குறைதீர் நாள் கூட்டங்களில் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளுமாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu