வட மாநில தொழிலாளர் போலி வீடியோ விவகாரம்: உ.பி.பா.ஜ. நிர்வாகியிடம் விசாரணை

வட மாநில தொழிலாளர் போலி வீடியோ விவகாரம்: உ.பி.பா.ஜ. நிர்வாகியிடம் விசாரணை
X

தூத்துக்குடி காவல் நிலையத்தில் விசாரணைக்காக வழக்கறிஞருடன் ஆஜரான பிரசாந்த் உம்ரா.

வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக வதந்தி பரப்பிய வழக்கு தொடர்பாக உ.பி.பா.ஜ.க. நிர்வாகியிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்பட்டதாக போலி வீடியோ வெளியிட்டு வதந்தி பரப்பிய உ.பி. பா.ஜ.க. நிர்வாகியிடம் தூத்துக்குடி போலீசார் விசாரணை நடத்தினர்.

தமிழ்நாட்டில் கடந்த மாதம் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவியது. அந்த வீடியோக்கள் வடமாநில தொழிலாளர்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதோடு, சட்டம் ஒழுங்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும் இருந்தது. இதனால், தமிழகத்தில் இருந்து பல்லாயிரக்கணக்கான வெளிமாநிலத் தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பத் தொடங்கினர்.

இதுதொடர்பாக பீகார் மாநில குழுவினர் தமிழகத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அந்த வீடியோக்கள் அனைத்தும் போலியானது என தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, போலி வீடியோ பரப்பிய குற்றச்சாட்டின் கீழ் பீகார் காவல்துறையினர் மணிஷ் காஷ்யப், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பிரசாந்த் உம்ராவ் உட்பட 4 பேர் மீது முதல் வழக்குப்பதிவு செய்தனர் தொடர்ந்து போலி வீடியோ விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் மட்டும் இது தொடர்பாக 13 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் போலி வீடியோக்களை பகிர்ந்த மணிஷ் காஷ்யப் என்ற யூடியூபர் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, வட மாநில தொழிலாளர்கள் குறித்து வதந்தி பரப்பியது தொடர்பாக போலீஸார் தன்னை தேடுவதை அறிந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி பிரசாந்த் உம்ரா ஜாமீன் கேட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். இதையெடுத்து இந்த வழக்கு சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களில் தொடர்ந்து 15 நாட்கள் ஆஜராக வேண்டும் என பிரசாந்த் உம்ராவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

அந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் பிரசாந்த் உம்ரா மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் ஆஜராக உத்தரவிட்டு பிரசாந்த் உம்ராவுக்கு ஜாமீன் வழங்கியது. இதன் தொடர்ச்சியாக, தூத்துக்குடி மத்தியபாகம் காவல் நிலையத்தில் தூத்துக்குடியை சேர்ந்த பா.ஜ.க. வழக்கறிஞர்களுடன் பிரசாந்த் உம்ரா இன்று நேரில் ஆஜரானார்.

அவரிடம் திருச்செந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் வசந்தராஜ், தூத்துக்குடி காவல் துணை கண்காணிப்பாளர் சத்யராஜ் மற்றும் மத்தியபாகம் காவல் ஆய்வாளர் ஐயப்பன் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!