பாஜக குறித்து யாரும் பேச வேண்டாம்: அதிமுக முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்

பாஜக குறித்து யாரும் பேச வேண்டாம்: அதிமுக முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்

தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.

பாரதிய ஜனதா குறித்து அதிமுக தொண்டர்கள் யாரும் பேச வேண்டாம் என முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசினார்.

அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு, தமிழகத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக அதிமுக தேர்தல் பணி குழு பூத் கமிட்டி அமைக்கும் பணியை அதிமுக பொதுச் செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கி வைத்தார்.

அதன்படி, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதி பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் ஆலோசனை கூட்டம் தூத்துக்குடி மணிநகர் கனி பேலஸ் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. கூட்டத்துக்கு, அதிமுக தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சண்முகநாதன் தலைமை வகித்தார்.

தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் பேசியதாவது:

அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களை நியமிக்கும் பணியை 10 நாட்களுக்குள் அனைவரும் முடிக்க வேண்டும். தற்போது, நிலவும் அரசியல் சூழலில் தலைமையின் உத்தரவு இல்லாமலும், மாவட்ட தலைமை உத்தரவு இல்லாமலும் யாரும் பாரதிய ஜனதா கட்சி குறித்து பேசவோ, நோட்டீஸ் ஒட்டவோ வேண்டாம்.

அதிமுக தலைமையின் உத்தரவு வந்தால் மட்டுமே எந்த பணியையும் செய்ய வேண்டும். தலைமை உத்தரவிட்டால் எதிர்கட்சிகள் மட்டுமல்ல கூட்டணி கட்சியாக இருந்தாலும், யாராக இருந்தாலும் ஓட ஓட விரட்டிவிடலாம் என சண்முகநாதன் பேசினார்.

கூட்டத்தில், அதிமுக அமைப்பு செயலாளர் சின்னத்துரை, மாவட்ட கழக அவைத்தலைவர் திருப்பாற்கடல், முன்னாள் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் சுதாகர், முன்னாள் நகர்மன்றத் தலைவர் ஹென்றி, தமிழ்நாடு புதுச்சேரி பார்கவுன்சில் உறுப்பினர் வழக்கறிஞர் பிரபு, மாநில மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் ராஜசேகர், மாவட்ட துணைச் செயலாளர் சந்தனம், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன், ஜெய்கணேஷ், நட்டார்முத்து, முன்னாள் கவுன்சிலர்கள் செண்பகச் செல்வன், சுடலைமணி, முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் மாரியப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தின்போது, தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் உள்ள 284 வாக்குச்சாவடிக்கும் பூத் கமிட்டி, மகளிர் குழு, இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை குழு என மூன்று வகையான பூத் கமிட்டிகளை அமைப்பது குறித்து விரிவான ஆலோசனை வழங்கினார்.

Tags

Read MoreRead Less
Next Story