தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் நான்கு பேர்  குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது
X
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை மற்றும் கஞ்சா விற்பனை வழக்குகளில் சம்மந்தப்பட்ட 4 பேர் இன்று ஒரே நாளில் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை, கொலை முயற்சி, போதைப் பொருட்கள் கடத்தல் வழக்குகளில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டவர்கள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த 17.10.2023 அன்று மாசாப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வெம்பூர் பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (24) என்ற ராணுவ வீரரை முன்விரோதம் காரணமாக கொலை செய்த வழக்கில் வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த ஆயிரராமன் என்கிற மாரிச்சாமி (28) என்பவரை மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர்.

கடந்த 21.10.2023 அன்று புதுக்கோட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட முடிவைத்தானேந்தல் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வழக்கில் ஆறுமுகநேரி காமராஜர்புரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்ரூபன் (19), ஆறுமுகநேரி முத்துகிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த முத்துராஜ் (22) மற்றும் ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்த பாலமுருகன் (20) ஆகியோரை புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவுசெய்து கைது செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்த கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கைதான அலெக்ஸ்ரூபன், முத்துராஜ் மற்றும் பாலமுருகன் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்க புதுக்கோட்டை காவல் நிலைய ஆய்வாளர் வின்சென்ட் அன்பரசி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அறிக்கை தாக்கல் செய்தார்.

காவல் துணை கண்காணிப்பாளர் மற்றும் காவல் ஆய்வாளர் ஆகியோரின் அறிக்கையின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பரிந்துரை செய்தார். இதையெடுத்து, நான்கு பேரையும் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டார்.

இதன்பேரில், வெம்பூர் நடுத்தெருவைச் சேர்ந்த மாரிச்சாமி, ஆறுமுகநேரி காமராஜபுரத்தைச் சேர்ந்த அலெக்ஸ்ரூபன், முத்துராஜ் மற்றும் ஆறுமுகநேரி பாரதி நகரை சேர்ந்த பாலமுருகன் ஆகிய நான்கு பேரும் இன்று குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை போக்சோ வழக்குகளில் சம்மந்தப்பட்ட 13 பேரும், போதை பொருட்கள் கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்ட 28 பேரும் என மொத்தம் 154 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!