தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை அறிமுகம் செய்த புதிய பாதை திட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறை அறிமுகம் செய்த புதிய பாதை திட்டம்
X

தூத்துக்குடியில் நடைபெற்ற புதிய பாதை திட்ட அறிமுக நிகழச்சியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் ‘புதிய பாதை” என்ற மனமாற்றத்திற்கான வழிகாட்டு நிகழ்ச்சி அறிமுகம் செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பில், பல குற்ற செயல்களில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்தவர்கள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடக்கூடியவர்கள் திருந்தி நல்வாழ்வு வாழ மருத்துவர், சட்ட வல்லுநர், காவல்துறை அதிகாரிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குழு அமைக்கப்பட்டு அவர்கள் மூலம் ‘புதிய பாதை” என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி முதல்முறையாக இன்று நடைபெற்றது.

தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்தக் நிகழ்ச்சியில், சைபர் குற்ற பிரிவு காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் உன்னிகிருஷ்ணன், தூத்துக்குடி உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சத்தியராஜ், மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் சிவசுப்பு, தென்பாகம் காவல் நிலைய ஆய்வாளர் ராஜாராம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்தக் நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசியதாவது:

பழிக்குப்பழி எண்ணம் மேலோங்கி இருப்பது, கோபத்தை கட்டுபடுத்த முடியாத நிலை, போதை பழக்கத்திற்கு அடிமையாக இருப்பது, பய உணர்ச்சி இல்லாமை மற்றும் குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு இல்லாதது போன்ற காரணங்களால் குற்ற செயல்களில் மீண்டும் மீண்டும் ஈடுபடுகின்றனர்.

அவ்வாறு ஈடுபடுபவர்களை குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக, தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அழைத்து வாரந்தோறும் சனிக்கிழமை அன்று காவல் நிலையங்களில் வைத்து இக்குழுவினரால் ஆலோசனைகள் வழங்கப்படும்.

மேலும் மேற்படி தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வழக்குகள் உள்ளவர்கள், அவர்கள் மேல் உள்ள வழக்குகளை சட்டப்படி எதிர்கொள்ள வேண்டும். இனிவரும் காலங்களில் குற்ற செயல்களில் ஈடுபடாமல் இருப்பதற்காக மட்டுமே இந்த மனநல ஆலோசனைகள் வழங்கப்படும். இந்த முகாம் திருந்தி நல்வாழ்வு வாழ்வதற்கான ஒரு முயற்சியாகும். மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 137 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

மாவட்ட காவல்துறையினரால் இதுவரை 3620 ‘மாற்றத்தை தேடி” என்ற விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு 1,14,390 பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் பயனாக தூத்துக்குடி மாவட்டத்தில் ஜாதி ரீதியான பிரச்னைகள் பெருமளவில் குறைந்துள்ளது.

மேலும், கொலை வழக்குகள் 24 சதவிகிதம் குறைந்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் பயனாக மாவட்டத்தில் கிராமங்களின் ஊர்தலைவர்கள், முக்கியஸ்தர்கள், ஜாதிய தலைவர்கள் தாமாக முன்வந்து தங்களது பகுதிகளில் உள்ள ஜாதிய அடையாளங்களை வண்ணம் பூசி அழித்து வருகின்றனர்.

தற்போது வரை மாவட்டத்தில் 6377 ஜாதிய அடையாளங்கள் அழிக்கப்பட்டுள்ளது. இன்னும் சில நாட்களில் மாவட்டம் முழுவதுமாக அனைத்து ஜாதிய அடையாளங்களும் அழிக்கப்பட்டுவிடும். மேலும் தாமாக முன்வந்து ஜாதிய அடையாளங்களை அழித்த பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், தூத்துக்குடி மனநல மருத்துவர் சிவசைலம் மற்றும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சட்ட ஆலோசகர் ராஜேஷ் கண்ணா ஆகியோர் கொண்ட குழுவினர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு ஜாமீனில் வெளிவந்த 32 பேர்களுக்கு அடிப்படை மன உளவியல் குறித்தும், கோபத்தை கட்டுபடுத்தும் வழிமுறைகள் குறித்தும், போதை பழக்க அடிமைத்தனம் மீட்பு அறிவுரைகள் குறித்தும், குற்ற செயல்களில் ஈடுபடுவதால் ஏற்படும் பின்விளைவுகள் குறித்தும் தனித்தனியாக ஆலோசனைகள் வழங்கினர்.

Tags

Next Story
ஈரோடு வீட்டுவசதி வாரிய அலுவலகம் இடமாற்றம் - பொதுமக்கள் வசதிக்காக புதிய இடத்தில் செயல்பாடு