தமிழகத்தில் தூய்மை பணியாளர் நல வாரியம் செயல்படவில்லை என தேசிய ஆணையத் தலைவர் புகார்
தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் துப்புரவு பணியாளர் சுடலைமாடனை தேசிய ஆணையத் தலைவர் வெங்கடேசன் பார்வையிட்டார்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி பேரூராட்சியில் தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்த சுடலைமாடன் என்பவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். தற்போது, ஆபத்தான நிலையில், அவர் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
துப்புரவு பணியாளர் சுடலைமாடனை தற்போதைய உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைராவின் மாமியாரும், முன்னாள் பேரூராட்சி தலைவியுமான திமுகவைச் சேர்ந்த ஆயிஷா கல்லாசி என்பவர் ஜாதி பெயரை சொல்லி திட்டியதாகவும், மேற்பார்வையாளர் பணி உயர்வுக்கு பணம் கேட்டதாலும் மனம் உடைந்து விஷம் அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
இதற்கிடையே, உயிருக்கு ஆபத்தான நிலையில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சுடலைமாடனை தேசிய தூய்மை பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் இன்று நேரில் பார்வையிட்டு அவரது குடும்பத்தாரிடம் உடல் நலம் குறித்து விசாரணை செய்தார்.
மேலும், முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா கல்லாசி மீது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணனிடம் விவரங்களை வெங்கடேசன் கேட்டறிந்தார்.
தொடர்ந்து, தேசிய தூய்மைப் பணியாளர் ஆணைய தலைவர் வெங்கடேசன் செய்தியாளரிடம் கூறியதாவது:
உடன்குடி பேரூராட்சி துப்புரவு பணியாளராக பணியாற்றிய சுடலைமாடன் தற்கொலை முயற்சி தொடர்பாக முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும், உதவி ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு சென்னையில் போலீஸார் முகாமிட்டு கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த விகாரத்தில் முன்னாள் பேரூராட்சி தலைவி ஆயிஷா மீது மட்டுமில்லாமல் ஆயிஷாவை பேரூராட்சி நிர்வாகத்தில் தலையிட அனுமதித்த தற்போதைய உடன்குடி பேரூராட்சி தலைவி ஹிமைரா பதவியை ரத்து செய்து அவர் மீதும் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.
மலக்குழியில் இறங்கி தூய்மை பணியாளர்கள் உயிரிழப்பதில் இந்தியாவிலேயே தமிழகம் தான் நம்பர் ஒன் மாநிலமாக உள்ளது. எனவே, அதைத் தடுக்க சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டும். தற்போது தூய்மை பணியாளர் மலக்குழியில் இறங்கி உயிரிழந்தால் ஜாமீனில் வரக்கூடிய பிரிவாக உள்ளதை ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவாக மாற்ற வேண்டும்.
மேலும், தூய்மைப் பணியாளர் உயிரிழப்புக்கு காரணமாக சம்பந்தப்பட்ட நகராட்சி ஆணையர் உள்ளிட்டோரை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒன்றை ஆண்டுகளாக திமுக ஆட்சியில் தூய்மைப் பணியாளர் நல வாரியம் செயல்படாமல் உள்ளது. அதை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இந்தியாவில் 11 மாநிலங்களில் தூய்மைப் பணியாளர் ஆணையம் உள்ளது. அதேபோன்று தமிழகத்திலும் தூய்மைப் பணியாளர் ஆணையம் அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேசிய தூய்மைப் பணியாளர் ஆணையத் தலைவர் வெங்கடேசன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu