தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் அக்.28ல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு

தூத்துக்குடி அருகே வல்லநாட்டில் அக்.28ல் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு
X

கடந்த ஆண்டு சிறப்பாக பணியாற்றியவர்களுக்கு ஆட்சியர் செந்தில்ராஜ் நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடியில் 31 ஆவது மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் சென்ற ஆண்டு மாநில அளவிலான இரண்டு நாள் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் மூலமாக நடத்தப்பட்டது. அந்த மாநாட்டில் 850 ஆய்வறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன. சுமார் 1700 பள்ளி மாணவ, மாணவியர்கள் இளம் விஞ்ஞானிகளாக கலந்து கொண்டனர்.

மதிப்பீட்டாளர்கள், வழிகாட்டு ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்பட சுமார் 2500 பேர் பங்கேற்றனர். சென்ற ஆண்டு நடைபெற்ற மாவட்ட அளவிலான மாநாட்டில் 420 ஆய்வுக்கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 740 மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு மாவட்ட மற்றும் மாநில அளவில் நடைபெற்ற தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டினை சிறப்பாக நடத்தியதற்காக தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரி மற்றும் குழு உறுப்பினர்களுக்கு மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் நினைவுப் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.

தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தலைமையில், 31 ஆவது மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு நடத்துவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:

தூத்துக்குடி மாவட்டத்தில் மாவட்ட அளவிலான தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு - 2023 வல்லநாடு துளசி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் அக்டோபர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் பள்ளி அளவில் தெரிவு செய்யப்பட்ட மாணவ, மாணவியர்கள் தங்கள் ஆய்வு அறிக்கைகளுடன் கலந்து கொள்ள வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் 347 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இருந்து சுமார் 9000 மாணவ, மாணவியர் மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார்கள். இந்த மாநாட்டில் கிராமப்புற மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவ, மாணவியர்களும் உற்சாகத்துடன் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும். இந்த ஆண்டு நடைபெறவுள்ள மாநாட்டிற்காக சுமார் 4500 ஆய்வுக் கட்டுரைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த மாநாட்டில் தேர்வு செய்யப்படும் மாணவ, மாணவியர்கள் அடுத்த கட்டமாக நடைபெறும் மண்டல மாநாட்டில் கலந்து கொள்வார்கள். எனவே, இந்த மாநாட்டில் பள்ளி மாணவ, மாணவியர்கள் பெருந்திரளாக கலந்துகொண்டு தங்களது ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்து பயன்பெறவும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்து உள்ளார்.

கூட்டத்தில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) தாக்கரே சுபம் ஞானதேவ் ராவ், மாவட்ட வருவாய் அலுவலர் அஜய் சீனிவாசன், தூத்துக்குடி சார் ஆட்சியர் கௌரவ்குமார், தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தகுமாரி, முதன்மை கல்வி அலுவலர் ரெஜினி மற்றும் தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டின் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai tools for education