மழைநீருடன் கழிவுநீர் கலப்பு: ஸ்ரீவைகுண்டம் பகுதி கிராம மக்கள் ஆட்சியரிடம் மனு
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கால்வாய் கிராம மக்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள கால்வாய் கிராமத்தில் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலையில் தேங்கி உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கிராம மக்கள் மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தின்போது, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றார். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கிராம மக்கள் தங்களது கோரிக்கையை வலியுறுத்தி ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
அப்போது, தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராம மக்கள் அந்தப் பகுதி ஊராட்சி மன்ற உறுப்பினர் மணி மந்திரம் தலைமையில் ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறி இருப்பதாவது:-
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகிறன. இந்த கிராமத்தில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழை காரணமாக இசக்கி அம்மன் கோவில் தெரு பகுதியில் மழை நீருடன் கழிவுநீர் கலந்து தேங்கி உள்ளது.
இதனால், அந்தப் பகுதியில் சேரும் சகதியுமாக மக்கள் நடமாட முடியாத அளவுக்கு காணப்படுகிறது. கழிவுநீர் கலந்த மழைநீர் தேங்கியுள்ள சாலையில் பொதுமக்கள் நடந்து செல்வதால் சேர்த்துக்கடி நோய் வருகிறது. மேலும் கழிவு தண்ணீர் தேங்குவதால் இந்த பகுதியில் டெங்கு உள்ளிட்ட வைரஸ் காய்ச்சலும் பரவி வருகிறது.
இதுகுறித்து ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலை உள்ளது. எனவே, மாவட்ட ஆட்சியர் இந்த விவகாரத்தில் தலையீட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu