தூத்துக்குடியில் செவிலியர் கல்லூரி அமைக்க கோரிக்கை வைத்த அமைச்சர் கீதாஜீவன்
தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை மூலம் ரூ. 4.06 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்டுள்ள 6 துணை சுகாதார நிலையங்கள், ஒரு செவிலியர் குடியிருப்பு கட்டிடம், 2 வெளி நோயாளிகள் பிரிவு, ஒரு சுகாதார ஆய்வகம், ஒரு கண் அறுவை சிகிச்சை மையம் ஆகியவற்றை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இன்று திறந்து வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில், சமூக நலன் - மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பேசியதாவது:-
தமிழ்நாடு முதலமைச்சர் மருத்துவமும், கல்வியும் தனது இரண்டு கண்கள் என்று கூறி அந்தத் துறைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார். கல்வி மூலம் எதிர்கால சமுதாயத்தினர் அறிவாற்றல் மிக்கவர்களாக உருவாவதற்கும், குக்கிராமங்களில் உள்ள மக்களையும் மருத்துவ சேவை சென்றடைய வேண்டும் என்று பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் முதியோர்கள், கை, கால் முடங்கி உள்ளவர்கள் மற்றும் மருத்துவமனைக்கு செல்ல முடியாதவர்களுக்கு அவர்களின் வீடுகளுக்கே சென்று தொடர் மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் அனைத்து தரப்பினரும் பாராட்டும் வகையில் அமைந்துள்ளது.
அதேபோல், நம்மை காக்கும் 48 திட்டத்தில் விபத்தில் சிக்கியவர்களை அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தாலும் அவர்களின் சிகிச்சைக்கு தமிழ்நாடு அரசு ரூ. 1 லட்சம் வழங்குகிறது. இந்தத் திட்டங்களை மக்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே விபத்தில் சிக்கியவர்களை அரசு மருத்துவமனைகளில்தான் சேர்க்க வேண்டும் என்றில்லாமல் தனியார் மருத்துமனைகளிலும் சேர்த்து சிகிச்சை பெறலாம்.
முன்னாள் முதல்வர் கருணாநிதியால் கொண்டு வரப்பட்ட காப்பீட்டு திட்டம், மத்திய அரசின் காப்பீட்டு திட்டத்துடன் ஒருங்கிணைத்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில்தான் காப்பீட்டு திட்டத்தில் அடையாள அட்டை பெற்றவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் மூலம் காப்பீடு திட்ட அடையாள அட்டை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், எடை குறைந்த குழந்தைகளை கண்டறிந்து தொடர்ந்து அவர்களுக்கு மருத்துவ சேவைகள் வழங்கிடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கருணாநிதி ஆட்சிக்காலமான 1996-2001 கால கட்டத்தில் தொடங்கப்பட்டு மக்களுக்கு சிறப்பான சேவை வழங்கி வருகிறது.
இந்த மருத்துவமனையில் தினமும் 2500 வெளிநோயாளிகள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். மேலும் 1200 உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த மருத்துவமனையில் 500 படுக்கைகள் கொண்ட கட்டிடத்தினை அப்போதைய துணை முதல்வராக இருந்த தற்போதையை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தற்போது கூடுதலாக கட்டிடங்கள் கட்டுவதற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் செவிலியர் கல்லூரி கொண்டு வரப்பட வேண்டும் என அமைச்சர் கீதாஜீவன் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu