தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் டெங்கு பரவலை தடுக்க நடவடிக்கை: ஆட்சியர் தகவல்
X

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ். (கோப்பு படம்).

டெங்கு பரவலை தடுக்க அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தூத்துக்குடி ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையை எதிர்நோக்கி, டெங்கு பரவலை தடுக்கும் விதமாக, அனைத்து துறை அலுவலர்களுடனான மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் பேசியதாவது:-

டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தியாகும் இடங்கள் அதனை தடுக்கும் வழிமுறைகள், தேவையற்ற கொசு உற்பத்தியாகும் பொருள்களை அப்புறப்படுத்தும் பணிகள், ரத்த பரிசோதனைகள் மற்றும் சிகிச்சை அவசியம் என்பதனை பற்றி அனைத்து துறை தலைவர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

காய்ச்சல் கண்ட இடங்களில் ஒட்டுமொத்த துப்புரவு பணி, மருத்துவக்குழுக்கள் அமைத்தல், கொசு ஒழிப்பு புகைமருந்து அடிக்கவும், நிலவேம்பு குடிநீர் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் பள்ளி கல்லூரிகளில் ஒட்டுமொத்த துப்புரவு பணிகளை மேற்கொள்ளவும், ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமைகளில் அரசு மற்றும் தனியார் கட்டிடங்கள் மற்றும் வளாகங்களில் கொசு உற்பத்தி காரணிகளை கண்டறிந்து அப்புறப்படுத்தவும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்து கொள்ளவும் அறிவுறத்தப்பட்டு உள்ளது. ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமைகளில் உபயோகமற்ற டயர்களை அப்புறப்படுத்தும் முகாம்கள் நடத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முறையான குளோரிசன் செய்யப்பட்ட குடிநீர் வழங்கவும், மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்யவும், குடிநீர் விநியோகிக்கும் குழாய்களில் கசிவோ அல்லது உடைப்போ ஏற்பட்டால் அதனை உடனடியாக கண்டறிந்து சரிசெய்து சீரான குடிநீர் விநியோகத்தை உறுதிசெய்ய சம்பந்தபட்ட நிர்வாகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

டெங்கு மற்றும் காய்ச்சல் பரவல் தொடர்பான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் விநியோகிக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. காய்ச்சல் கண்டறியப்பட்ட நபர்கள் அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.

மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டெங்கு பரவலை தடுக்கும் விதமாக அலுவலர்கள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் அறிவுறுத்தினார்.

Tags

Next Story
why is ai important to the future