தூத்துக்குடியில் மாரத்தான் ஓட்டம்: மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்பு
தூத்துக்குடியில் மாரத்தான் ஓட்டப் போட்டியை அமைச்சர்கள் கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் இன்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் மாரத்தான் ஓட்டப் போட்டி நடைபெற்றது.
மாவட்ட அளவிலான இந்தப் போட்டியை மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் முன்னிலையில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், மீன்வளம்- மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
மாரத்தான் ஓட்டப் போட்டி இரண்டு பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலருக்கும் நடத்தப்பட்டது. அதன்படி 17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ ஓட்டப் போட்டியும், 25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ , 17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்போட்டியும், 25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கி.மீ ஓட்டப்போட்டியும் நடைபெற்றது.
இந்த நெடுந்தூர ஓட்டப் போட்டியானது மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து ஆரம்பித்து ஜார்ஜ் ரோடு, பெல் ஹோட்டல் கார்னர், ரோச் பூங்கா, பீச் ரோடு ரயில்வே கேட் வரை சென்று மீண்டும் அதே வழியில் மாவட்ட விளையாட்டரங்கம் வந்தடைந்தது.
17 முதல் 25 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான 8 கி.மீ ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த சக்திவேல் என்பவருக்கு ரூ. 5000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த அஜித்குமார் என்பவருக்கு ரூ. 3000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் இடம் பிடித்த மாணிக்கத்துரை என்பவருக்கு ரூ. 2000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
25 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கான 10 கி.மீ ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த ரூபன் டேனியல் என்பவருக்கு ரூ. 5000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த முத்துசுபின் என்பவருக்கு ரூ. 3000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் இடம் பிடித்த வெங்கடேஷ் என்பவருக்கு ரூ. 2000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
17 முதல் 25 வயதிற்குட்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி கோகிலா என்பவருக்கு ரூ. 5000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த மாணவி ராதிகா என்பவருக்கு ரூ. 3000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் இடம் பிடித்த மாணவி ரம்யா என்பவருக்கு ரூ. 2000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
25 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்கான 5 கி.மீ ஓட்டப்போட்டியில் முதலிடம் பிடித்த செல்வமணி என்பவருக்கு ரூ. 5000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், இரண்டாம் இடம் பிடித்த ஷாலினி என்பவருக்கு ரூ. 3000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும், மூன்றாம் இடம் பிடித்த பரிமலர் என்பவருக்கு ரூ. 2000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழும் வழங்கப்பட்டது.
மேலும் மூன்று பிரிவுகளிலும் நான்காமிடம் முதல் பத்தாவது இடம் பிடித்தவர்களுக்கு தலா ரூ. 1000-ம் பரிசுத் தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் அந்தோணி அதிஷ்டராஜ், விளையாட்டு விடுதி மேலாளர் சிவா, அரசு அலுவலர்கள், மாணவ - மாணவியர் மற்றும் இளைஞர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu