தூத்துக்குடியில் வாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு மஹா யாகம்

தூத்துக்குடியில் வாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்கு மஹா யாகம்
X

தூத்துக்குடி பிரத்தியங்கிராதேவி கோயில் வளாகத்தில் உள்ள வாராஹி அம்மன்.

மகாளய அமாவாசையை முன்னிட்டு, தூத்துக்குடி ஸ்ரீசித்தர் பீடத்தில் உள்ள ஸ்ரீவாராஹி அம்மனுக்கு 2025 கிலோ கிழங்குகள் கொண்டு மஹா யாகம் நடத்தப்பட்டது.

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தர் நகரில் ஸ்ரீ மஹா பிரத்தியங்கிராதேவி - மஹா காலபைரவர் சித்தர் பீட ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில், தென்தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத தனிச்சிறப்பாக ஸ்ரீவாராஹி அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.

வெற்றிகளை அள்ளித்தந்திடும் ஸ்ரீசித்தர் பீட ஸ்ரீவாராஹி அம்மனுக்கு புரட்டாசி மஹாளய அமாவாசையை முன்னிட்டு முதல் முறையாக 2025 கிலோ கிழங்கு வகைகள் கொண்டு மஹா யாகத்துடன் கூடிய வழிபாடுகள் மிகச்சிறப்பாக நடைபெற்றது.

தமிழகத்தில் பருவமழை நன்கு பெய்து பசுமை வளம் சிறக்கவேண்டியும், உலகமக்கள் கொடிய நோய்கள் இன்றி நலமாக வாழவேண்டியும் மற்றும் வாழ்வில் கடன்தொல்லைகள் நீங்கி இல்லத்தில் செல்வம் பெருகிடவும், கல்வி வளம் மேம்படவும், நல்ல அரசு வேலை கிடைக்கவும், தொழில்வளம் சிறக்கவும், நோய்கள், வழக்குகள் தீர்ந்திடவும், அனைத்து மக்களும் செல்வச்செழிப்புடன், பரிபூரணமான நல்வாழ்வு பெற்றிடவும் வேண்டி ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் சீனிவாச சித்தர் தலைமையில் 2025 கிலோ கிழங்கு வகைகள் மஹா யாக வழிபாடுகள் காலை 9.30 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடுகளுடன் கோலாகலமாக தொடங்கியது.


காலை 9.50 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், லட்சுமி ஹோமமும், காலை 10மணிக்கு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு ஹோமமும் நடந்தது. அதனைத் தொடர்ந்து, முற்பகல் 11 மணிக்கு ஸ்ரீவாராஹி அம்மனுக்கு மிகவும் பிடித்தமான சேனைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, சீனிக்கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறுகிழங்கு, பனங்கிழங்கு, ராசவள்ளிக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, உருளைக்கிழங்கு மற்றும் கேரட், பீட்ரூட் போன்றவற்றுடன் பூமிக்கு அடியில் விளையும் அனைத்து வகையான பொருட்களும் என 2025 கிலோ கிழங்கு வகைகள் கொண்டு மஹா யாகம் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் பக்தர்கள் தமது குடும்பத்தினருடன் திரளாக பங்கேற்க கோலாகலமாக நடைபெற்றது.


தொடர்ந்து, மதியம் 12.30 மணிக்கு ஸ்ரீவாராஹி அம்மன், ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவர் உள்ளிட்ட பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரமும் மதியம் 12.50 மணிக்கு தீபாரதனையும் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சிறப்பு வழிபாடுகள் நிறைவுறுதல் பூஜையும், மாலை 5 மணிக்கு தீபாரதனையும் நடைபெற்றது. முடிவில், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

கிழங்கு வகைகள் மஹா யாகத்தினை முன்னிட்டு காலை முதல் இரவு வரை தொடர்ந்து பக்தர்களுக்கு மஹா அன்னதானம் வழங்கப்பட்டது. மஹா யாகத்திற்கான வழிபாடுகளை ஸ்ரீசித்தர் பீடத்தின் சுவாமிகள் ''சாக்தஸ்ரீ'' சற்குரு சீனிவாச சித்தர் தலைமையில் வழிபாட்டுக் குழுவினர், மகளிரணியினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

Next Story