தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் ஆய்வு
X

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையம் கோப்பு படம்.

தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்றுச் செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் நலச் சங்கம் வலியுறுத்தி உள்ளது.

தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளராக பொறுப்பேற்றுக் கொண்ட ஷாரத் ஸ்ரீவத்சவா முதன் முறையாக தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இன்று ஆய்வு மேற்கொண்டார். ரயில் நிலையத்துக்கு தேவையான வசதிகள் குறித்து அவர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

அப்போது, தூத்துக்குடி மாவட்ட பயணிகள் நலச் சங்க செயலாளர் பிரமநாயகம், பொருளாளர் லெட்சுமணன், துணைத் தலைவர் அந்தோணி முத்துராஜா, நிர்வாக செயலாளர் ஆனந்தன் ஆகியோர் தெற்கு ரயில்வே மதுரை கோட்ட மேலாளர் ஷாரத் ஸ்ரீவத்சவாவை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.

அந்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தூத்துக்குடி கீழூர் ரயில் நிலையம் செல்லும் சாலை மிகக் குறுகலாக உள்ளது. ஆதலால் கூடுதல் சாலை வசதி அமைத்துத் தர விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தூத்துக்குடி மேலூர் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டுகிறோம்.

தீபாவளி பண்டிகைக்கு தூத்துக்குடி -சென்னை இடையே சிறப்பு ரயில்கள் கூடுதலாக இயக்க வேண்டும். அதிகாலையில் தூத்துக்குடியில் இருந்து மதுரை வழியாக போடிநாயக்கனூருக்கு நேரடி ரயில் இயக்க வேண்டும். ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள தூத்துக்குடி- மேட்டுப்பாளையம் வாரம் மூன்று முறை ரயிலை உடனடியாக இயக்க வேண்டும்.

ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ள வண்டி எண் 16791-16792 திருநெல்வேலி - பாலக்காடு -திருநெல்வேலி பாலருவி விரைவு ரயிலை உடனடியாக தூத்துக்குடி வரை நீட்டிக்க வேண்டும். நன்றாக இயங்கிக்கொண்டிருந்த பயணிகளின் வரவேற்பை பெற்ற மும்பை - தூத்துக்குடி வாராந்திர விரைவு ரயிலை மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!