தூத்துக்குடியில் திருமணமான 3-வது நாளில் காதல் ஜோடி வெட்டிக் கொலை

தூத்துக்குடியில் திருமணமான 3-வது நாளில் காதல் ஜோடி வெட்டிக் கொலை
X

தூத்துக்குடியில் திருமணமான 3வது நாளில் வெட்டி கொலை செய்யப்பட்ட காதல் தம்பதியினர்.

தூத்துக்குடியில் திருமணமான 3 ஆவது நாளில் காதல் ஜோடி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தூத்துக்குடி முருகேசன் நகர் பகுதியை சேர்ந்த வசந்தகுமார் மகன் மாரிசெல்வம் (வயது23). இவர் சிப்பிங் கம்பெனி ஒன்றில் பணியாற்றி வருகின்றார். இவர், தூத்துக்குடி திருவிக நகர் பகுதியை சேர்ந்த கார்த்திகா (23) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு கார்த்திகாவின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன் தேவர்ஜெயந்தி அன்று கார்த்திகா வீட்டை விட்டு வெளியேறிவிட்டாராம். பின்னர், அவர் மாரிசெல்வத்தை சந்தித்து உள்ளார். அதன் பிறகு இருவரும் திருமணம் செய்து உள்ளனர். பின்னர், இருவரும் முருகேசன்நகரில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், வீட்டில் இருந்த மாரிசெல்வம் மற்றும் கார்த்திகா ஆகிய இருவரையும் மூன்று இருசக்கர வாகனத்தில் வந்த ஆறு பேர் கொண்ட கும்பல் திடீரென வீட்டிற்குள் நுழைந்து சராமரியாக வெட்டிவிட்டு தப்பியோடிவிட்டது. அரிவாளால் வெட்டப்பட்ட மாரிசெல்வமும், கார்த்திகாவும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

காதல் திருமணம் செய்து கொண்ட மூன்றாவது நாளிலேயே இளம் ஜோடி கொலை செய்யப்பட்ட சம்பவம் தூத்துக்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதைத் தொடர்ந்து கொலை நிகழ்ந்த இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் மற்றும் காவல்துறையினர் சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இந்த கொலையில் ஈடுபட்டது பெண்ணின் உறவினர்கள் என்பது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக போலீஸார் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து தப்பியோடிய குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தெரிவித்தார்.

கொலை நிகழ்ந்த இடத்தில் ஏராளமானோர் திரண்டதால் அங்கு மேலும் பதற்றம் ஏற்படாமல் இருக்க 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
தேர்வில் அதிக மதிப்பெண் பெற குழந்தைகளுக்கு மனஅழுத்தம் ஏற்படுத்தக்கூடாது: பெற்றோர்களுக்கு கலெக்டர் அறிவுரை!