தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழு தலைவரான கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையிலான குழுவினர் இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த மதிப்பீட்டுக் குழுவில் சட்டமன்ற உறுப்பினர்கள் காந்திராஜன் (வேடசந்தூர்), சந்திரன் (திருத்தணி), சிந்தனைசெல்வன் (காட்டுமன்னார் கோவில்), சிவகுமார் (மயிலம்), சேவூர் ராமச்சந்திரன் (ஆரணி), நாகை மாலி (கீழ்வேளுர்), பரந்தாமன் (எழும்பூர்), ஓ.எஸ். மணியன் (வேதாரண்யம்), ராஜேஷ்குமார் (கிள்ளியூர்) ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி, தருவைகுளம் மீன்பிடி துறைமுகம், சில்லாங்குளம் அரசு ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, சில்லாங்குளம் முத்துகருப்பன் மேல்நிலைப்பள்ளி, மறவன்மடம் தேவா சீ புட்ஸ் ஆகிய இடங்களை தமிழ்நாடு சட்டமன்ற பேரவை மதிப்பீட்டுக் குழுவினர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவரான கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தூத்துக்குடியில் மருத்துவக் கல்லூரி கட்டிக்கொண்டிருக்கிறார்கள். அதன் மொத்த தொகை ரூ. 137 கோடி. மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் பங்கிட்டு அந்த பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதிகாரிகள் கொடுத்த வாக்குறுதியில் வருகிற 2025 ஆம் ஆண்டுக்குள் முழுவதுமாக கல்லூரி பணிகள் முடிந்துவிடும்.
650 படுக்கைகள் கொண்ட தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு 1500 முதல் 2000 பேர் வருகை தந்து நோய் சிகிச்சை செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மருத்துவர்கள் தெரிவித்தார்கள். தூத்துக்குடி தருவைகுளத்தில் மீன்பிடி துறைமுகம் 100 மீட்டர் அதிகப்படுத்தி கட்டப்பட்டிருக்கிறதை பார்வையிட்டோம். இந்தப் பணிகளுக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டிருக்கிறது. பணி முழுமையாக முடிக்கப்பட்டிருக்கிறது. இன்னும் பல பணிகள் வேண்டும் என்று மீனவர்கள் கேட்டு இருக்கிறார்கள். மீன்பிடி துறைமுகத்தை இன்னும் அதிகப்படுத்த வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள்.
தூண்டில் வளைவு வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். பசுமை தீர்ப்பாயத்தில் தூண்டில் வளைவு கட்டக்கூடாது என்ற ஒரு நிலை இருக்கிறது. இந்த கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று ஒரு மீன்பிடி துறைமுகத்தை உருவாக்கி தருவோம். பசுமை தீர்ப்பாயத்தின் விதிகளுக்கு உட்பட்ட மீன்பிடி துறைமுகம் கட்டுவதற்கு பொறியாளர்களை கேட்டுக் கொண்டுள்ளோம். அவர்கள் ரூ. 40 கோடிக்கு மேல் கேட்டுள்ளார்கள். அதனை இந்த குழுவின் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம் என சட்டமன்ற மதிப்பீட்டுக் குழுத் தலைவர் அன்பழகன் தெரிவித்தார்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், சட்டமன்ற செயலாளர் சீனிவாசன், கூடுதல் செயலாளர் சுப்பிரமணியம், பிரிவு அலுவலர் பாண்டிராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu