ஒருமுறைக்கு மேல் எண்ணெய் பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை

ஒருமுறைக்கு மேல் எண்ணெய் பயன்படுத்துவோர் மீது சட்ட நடவடிக்கை
X

ஒருமுறைக்கு மேல் உணவு எண்ணெய் பயன்படுத்த தடை (மாதிரி படம்)

உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் தவறினால் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் உணவு பாதுகாப்புத் துறை மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளில் ஒரு முக்கிய நடவடிக்கை தான், “பயன்படுத்திய உணவு எண்ணெயை பயோ-டீசல் தயாரிப்பிற்கு கொள்முதல் செய்யும் திட்டம்” ஆகும். இந்தத் திட்டத்தின்படி, ஒருமுறைக்கு மேல் உணவு எண்ணெய் பயன்படுத்தக் கூடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் மருத்துவர் மாரியப்பன் வெளியிட்ட அறிவிப்பு விவரம் வருமாறு:

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் ஆணையரகத்தின் (FSSAI) மதிப்பீட்டின் படி, உணவு எண்ணெயைப் பயன்படுத்தும் வணிகர்களிடத்தில், 10-15% உணவு எண்ணெய் ஒருமுறை பயன்படுத்தி, ஆறிய நிலையில் இருக்கும். மேலும், பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் சமைக்கப் பயன்படுத்தி, தயாரிக்கப்படும் உணவினை சாப்பிடுபவர்களுக்கு இரத்தக்கொதிப்பு, இதயநோய் உள்ளிட்ட நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்றும் FSSAI தெரிவித்துள்ளது.

அவற்றைத் தடுக்கவும், உணவு வணிகர்களுக்கு ஏற்படும் இழப்பை ஈடுகட்டவும், FSSAI ஆனது பயன்படுத்திய எண்ணெயை, பயோடீசலுக்கு அனுப்பும் செயல்திட்டத்தினை அறிமுகப்படுத்தியது. அதன்படி, இம்மாவட்டத்திலும் அத்திட்டம் FSSAI-ல் அங்கீகரிக்கப்பட்ட “பயன்படுத்திய உணவு எண்ணெய் கொள்முதல் நிறுவனங்கள்” மூலம் துவங்கப்பட்டது. பயன்படுத்திய எண்ணெயில் உள்ள TPC-ன் அளவிற்கேற்ப, லிட்டர் ஒன்றிற்கு ரூ.35 முதல் 60 வரை உணவு வணிகர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது.

ஆனால், சமீப காலங்களில் உணவு வணிகர்கள் பயன்படுத்தும் எண்ணெயின் அளவிற்கும், மீதமாகும் பயன்படுத்திய எண்ணெயின் அளவிற்கும் பொருத்தமற்ற வகையில் மிகக் குறைவாகத்தான் பயன்படுத்திய உணவு எண்ணெயானது இம்மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படுகின்றது. சென்ற நிதியாண்டில் 41,000 லிட்டர் பயன்படுத்திய உணவு எண்ணெய் மட்டுமே தூத்துக்குடி மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது நிரண்யிக்கப்பட்ட இலக்கில் 51 சதவீதம் மட்டுமேயாகும்.

எனவே, உணவு பாதுகாப்பு மற்றும் தரங்கள் சட்டம் 2006 மற்றும் அதன் கீழ் வகுக்கக்கப்பட்ட ஒழுங்குமுறைகளின் கீழ் உள்ள அதிகாரத்தினைப் பயன்படுத்தி, அறிவிப்பு வணிகர்களுக்கு வழங்கப்படுகின்றது. உணவு எண்ணெயை ஒருமுறை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

உணவு எண்ணெய் கொள்முதல் மற்றும் பயன்பாட்டிற்கு பதிவேடு பராமரிக்க வேண்டும். நியமன அலுவலர்/உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்விற்கு வரும் பொழுது அப்பதிவேட்டினை சமர்ப்பிக்க வேண்டும். ஒரு முறை பயன்படுத்தி மீதமான உணவு எண்ணெயை, தனியான கொள்கலனில் சேகரித்து, அங்கீகரிக்கப்பட்ட “பயன்படுத்திய உணவு எண்ணெய் கொள்முதல் நிறுவனங்களுக்கு மட்டுமே” விற்பனை செய்ய வேண்டும்.

அங்கீகரிக்கப்பட்ட “பயன்படுத்திய உணவு எண்ணெய் கொள்முதல் நிறுவனங்கள்” பயன்படுத்திய எண்ணெயைக் கொள்முதல் செய்ய வரவில்லை எனில், உணவு பாதுகாப்புத் துறைக்குத் தகவல் வழங்க வேண்டும். உணவு வணிகர் கொள்முதல் செய்திருந்த உணவு எண்ணெயின் அளவிற்கும், ஒருமுறை பயன்படுத்திய உணவு எண்ணெயின் அளவிற்கும் பொருத்தமற்று இருந்தால், விசாரணை நடத்தி, தவறான தகவல் வழங்கியமைக்காக, உணவு வணிகர் மீது மேற்கூறிய சட்டத்தின் பிரிவு 61-ன் கீழ் வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

உணவு வணிகரிடத்தில் ஒருமுறை பயன்படுத்திய உணவு எண்ணெயைத் திரும்ப பயன்படுத்துவது கண்டறியப்பட்டாலோ அல்லது ஒருமுறை பயன்படுத்திய எண்ணெயை அங்கீகரிக்கப்பட்ட “பயன்படுத்திய உணவு எண்ணெய் கொள்முதல் நிறுவனங்கள்” அல்லாத பிற வணிகர்களுக்கு விற்பனை செய்தது கண்டறியப்பட்டாலோ, உணவு வணிகர்களது உணவு பாதுகாப்பு உரிமம், பதிவுச் சான்றிதழ் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம், வணிகர்களது வணிகம் பாதிக்கப்படலாம்.

உணவு பாதுகாப்புத் துறை இன்றிலிருந்து மிகச் சரியாக 15 தினங்கள் கழித்து, தோராயமாக தேர்ந்தெடுக்கப்பட்ட (randomly selected) உணவு வணிகர்களிடத்தில் திடீர் ஆய்வு செய்ய உள்ளதால், வணிகர்கள் தங்களது தவறுகளைத் திருத்திக்கொள்ள அறிவுறுத்தப்படுகின்றது. தவறும்பட்சத்தில், சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக நேரிடும் என்றும் எச்சரிக்கப்படுகின்றது.

உணவு வணிகர்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட “பயன்படுத்திய உணவு எண்ணெய் கொள்முதல் நிறுவனங்கள்” மீது குறை இருந்தாலும், துறையின் கவனத்திற்கு கொண்டுவரலாம். உணவகங்களில் பயன்படுத்திய எண்ணெயைத் திரும்பப் பயன்படுத்துவதை நுகர்வோர்கள் அறிந்தால், 9444042322 என்ற எண்ணில் வாட்ஸ்அப் மூலமோ அல்லது உணவு பாதுகாப்புத் துறையின் TN Food Safety செயலி மூலமோ அல்லது https://food safety.tn.gov.in என்ற இணையதளம் மூலமோ புகார் அளிக்கலாம். புகார் அளிப்பவரது ரகசியம் காக்கப்படும் என மாவட்ட உணவு பாதுகா்பு நியமன அலுவலர் மாரியப்பன் தெரிவித்துள்ளார்.

Next Story
ai in future agriculture