தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை: டாக்டர் கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு
X

தூத்துக்குடியில் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுப்போய் உள்ளது என புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர் டாக்டர் கிருஷ்ணசாமி கூறினார்.

புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் வழிப்பறி, செயின் பறிப்பு, வாகன திருட்டு உள்ளிட்டவை அதிகரித்துள்ளது. இதற்கு சட்டம் ஒழுங்கு முறையாக பராமரிக்கப்படாததே காரணம். காவல்துறையினர் சுதந்திரமாக செயல்பட விடாமல் தடுக்கப்படுகின்றனர். அரசியல் கட்சியினர் காவல் நிலையத்தில் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சோதனை நடைபெறுகிறது என்றால் அதற்கு அடிப்படை ஆதாரங்கள் உள்ளது. பழிவாங்கும் நோக்கம் கிடையாது. தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில் கோடிக்கணக்கில் பணத்தை சேர்த்து வைத்துக் கொண்டு தேர்தல் காலங்களில் 500 ரூபாய் கொடுத்தும், ஆயிரம் ரூபாய் கொடுத்தும் வெற்றி பெற்று விடலாம் என்ற தி.மு.க.வின் கனவு பலிக்காது. 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி தோற்கும்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதிதாக கட்டப்பட்ட பேரூந்து நிலையத்தில் கடைகள் ஒதுக்கீடு செய்வதில் முறைகேடு நடந்துள்ளது. வெளிப்படை தன்மை இல்லை. இதன் உண்மை தன்மை குறித்து மேயர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். இல்லை என்றால் வருமான வரித்துறை மற்றும் அமலாக்கத்துறையில் புகார் அளிப்பேன்.

தூத்துக்குடியில் ஒரே சமூகத்தை சேர்ந்த காதல் ஜோடி கொலை செய்யப்பட்டது வருத்தம் அளிக்கும் செயல். ஒரே சமூகமாக இருந்தாலும் மாற்று சமூகமாக இருந்தாலும் இது போன்ற செயல் கண்டிக்கத்தக்கது. பெற்றோர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்க வேண்டும். இந்த சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கண்டனம் தெரிவிக்க வேண்டும். ஜாதி பெருமையை ஒழிக்க பள்ளி பாடத்தில் இருந்தே செல்லி கொடுக்க வேண்டும்.

இவ்வாறு டாக்டர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!