தி.மு.க. ஒன்றிய செயலாளர் கையில் சட்டம் ஒழுங்கு: அண்ணாமலை விமர்சனம்
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தூத்துக்குடியில் இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட பா.ஜ.க. அலுவலகத்தில் வைத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் கையில் உள்ளது போல உள்ளது. காவல்துறை கையில் இல்லை. மேகதாது அணை கட்டப்படும் என கர்நாடக துணை முதலமைச்சர் சிவகுமார் அதிகாரிகள் மத்தியில் கூறியதற்கு தமிழக முதலமைச்சரிடம் இருந்து இதுவரை கண்டனம் தெரிவிக்கவில்லை. தமிழக முதலமைச்சர் தமிழகத்தில் உரிமைகளை தொடர்ந்து விட்டுக் கொடுத்து வருகிறார்.
தமிழகத்தில் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கையை கண்டு தமிழக முதல்வர் பயப்படுகிறார். அவரது குடும்பத்திற்கு ஊழலில் தொடர்பு உள்ளது. தற்போதுள்ள அமலாக்கத்துறை காங்கிரஸ் ஆட்சி காலத்தில் இருந்தது போன்ற அமலாக்கத்துறை கிடையாது. தவறு செய்தவர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும். இதை பொதுமக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
மேகதாது அணை கட்ட முயற்சி செய்தால் நாங்கள் நடைபயணமாக சென்று தடுத்து நிறுத்துவோம். தமிழக மக்கள் இதை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆதி திராவிடர் நலனுக்காக அவர்கள் நலனை உயர்த்த தமிழக அரசு எந்தவித திட்டமும் செயல்படுத்தவில்லை. இதன் காரணமாக மத்திய அரசு அளிக்கும் நிதிகள் திரும்ப சென்று கொண்டிருக்கிறது. இது வருத்தப்பட வேண்டிய விஷயம் ஆகும்.
தமிழக அமைச்சர்கள் அனைவரும் அரசியல் எதிரிகளை பழிவாங்குவது, ஊழல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். தற்போது எதிர்க்கட்சிகள் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை புறக்கணித்து இருப்பதன் மூலம் 2024 தேர்தலிலும் அவர்கள் நாடாளுமன்றத்தை விட்டு வெளியே செல்வார்கள்.
இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
தொடர்ந்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயத்திற்கு சென்று வழிபட்டார். பனிமய மாதா பேராலய பங்கு தந்தை குமார்ராஜா அண்ணாமலைக்கு பனிமய மாதா புகைப்படம் வழங்கி சிறப்பு பிரார்த்தனை செய்தார். பின்னர் பனிமய மாதாவுக்கு மெழுகுவர்த்தி ரோஸ் மாலை வழங்கினார்.
நிகழ்ச்சிகளில் பா.ஜ.க. மாநில துணைத் தலைவர் சசிகலா புஷ்பா, தெற்கு மாவட்ட தலைவர் சித்ராங்கதன், தூத்துக்குடி மாவட்ட வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சுரேஷ் குமார், வாரியர், மண்டல பொருளாளர் வன்னியராஜ், வெளிநாடு வாழ் பிரிவு நிர்வாகி மணிகண்டன் உள்ளிட்ட பா.ஜ..கவினர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu