தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழா: லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலய தங்கத்தேர் திருவிழாவில் பங்கேற்ற பக்தர்கள்.
உலகப் புகழ்பெற்ற தூத்துக்குடி தூய பனிமய மாதா பேராலயம் ரோம் நகரின் பசலிக்கா அந்தஸ்து பெற்றது ஆகும். தூத்துக்குடி கடற்கரை சாலையில் அமைந்துள்ள தூய பனிமய மாதாவை வேண்டி வழிபடும் மக்களுக்கு அனைத்து வகையான வேண்டுதல்களையும் நிறைவேற்றி தருவதால் கடலோர மக்கள் மட்டுமின்றி ஜாதி மத வேறுபாடுமின்றி அனைத்து மக்களும் வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த ஆலயத்தில் பாரம்பரிய முறைப்படி ஆடி மாதம் திருவிழா நடக்கும். ஆண்டுதோறும் ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் திருவிழா துவங்கி ஆகஸ்ட் 5ஆம் தேதி திருவிழா நடைபெறும். கடந்த 1806 ஆம் ஆண்டு முதல் தங்கத்தேர் திருவிழா நடைபெற்றது. இதுவரை 15 முறை தங்கத்தேர் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த நிலையில், 16 ஆவது முறையாக இன்று ஆலயத்தின் 441 ஆண்டு திருவிழாவை முன்னிட்டு தங்க தேர்த்திருவிழா நடைபெற்றது.
தங்கத்தேர் திருவிழாவில் தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் இருந்தும், இலங்கை மலேசியா சிங்கப்பூர் கனடா அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் வசிக்கும் பக்தர்களும் மாதாவின் அருள் பெற திருவிழாவில் பங்கேற்று உள்ளனர். தங்கத்தேர் திருவிழாவிற்காக 53 அடி உயர தங்கத்தேர் சுமார் ஒன்றை கோடி ரூபாய் மதிப்பில் புதிதாக ஜப்பான் நாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட தங்க இழைகள் மற்றும் அமெரிக்கன் டைமண்ட் ஆகியவற்றால் சிறப்பாக அலங்காரம் செய்யப்பட்டு பவனியாக சென்றது.
இந்த ஆண்டு பனிமய மாதாவின் 441 வது ஆண்டு தங்கத்தேர் திருவிழா கடந்த ஜூலை 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி பத்து நாட்களும் பல்வேறு மறை மாவட்ட ஆயர்கள் தலைமையில் உலக மக்களுக்காக சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தங்கத்தேர் பவணியை முன்னிட்டு இன்று காலை 7 மணிக்கு தங்கத்தேர் திருப்பலி கோவா உயர் மறை மாவட்ட பேராயர் கர்த்தினால் பிலிப் நேரி தலைமையில் நடைபெற்றது.
பின்னர், தங்கத்தேரை கோயமுத்தூர் மறை மாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ், இலங்கை மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னான்டோ ஆகியோரால் அர்சிக்கப்பட்டு பவனி நடைபெற்றது. ஆலய வளாகத்தில் இருந்து துவங்கிய இந்த தங்கத்தேர் பவனியில் ஜாதி மத வேறுபாடின்றி லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வடத்தைப் பிடித்து இழுத்தனர்.
தங்க தேர் பவனி ஆலயத்தை சுற்றியுள்ள நான்கு வீதி வழியாக சென்று பின்பு ஆலயத்தை வந்தடைந்தது. தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள. தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் தலைமையில் சுமார் 2000-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu