தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணி மண்டபம் நாளை திறப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

தூத்துக்குடியில் குரூஸ் பர்னாந்து மணி மண்டபம் நாளை திறப்பு: அதிகாரப்பூர்வ அறிவிப்பு
X

தூத்துக்குடியில் கட்டப்பட்டுள்ள குரூஸ் பர்னாந்து மணி மண்டபம்.

தூத்துக்குடியில் இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்ட குரூஸ் பர்னாந்து மணி மண்டப திறப்பு விழா நாளை நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாநகருக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து ஏறத்தாழ 50 கிலோ மீட்டர் தொலைவு குழாய் அமைத்து தண்ணீர் கொண்டு வந்தவர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ். அவர், 15.11.1869 அன்று பிறந்தார். அறிவுத் திறமையும், அறிவுக் கூர்மையும் கொண்டவர். உழைப்பால் உயர்ந்தவர். ஈடுபடும் செயலில் இடர்களும் தடைகளும் தொடர்ந்தாலும், அச்செயல் பலருக்கு பயன்படும் எனில், அதனை செய்து முடித்து வெற்றி காணும் மன உறுதி கொண்டவர் அவர்.

தூத்துக்குடி நகராட்சி தலைவராக 21.12:1909-இல் பொறுப்பேற்ற ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் மக்களின் பேராதரவுடன் ஐந்து முறை தொடர்ந்து நகராட்சி மன்றத் தலைவராக விளங்கி உள்ளார். கடற்கரை நகரமான தூத்துக்குடி நீண்ட நெடுங்காலமாகவே குடிநீர் பிரச்னையால் சிரமப்பட்டு வந்துள்ளது.

1927-ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம் மிகக் கடுமையான குடிநீர் பஞ்சம் ஏற்பட்டபோது மிகுந்த தொலைநோக்குப் பார்வையுடன், நெல்லை தாமிரபரணி ஆற்றிலிருந்து குழாய் மூலம் நீர் கொண்டு வரும் திட்டத்தினை சிறப்பாக செயல்படுத்தி, மக்களின் பாராட்டினை பெற்றார்.

இந்தக் குடிநீர்ப் பிரச்னைகள் தீர்ந்தது மட்டுமல்லாமல் நகரின் பல வளர்ச்சிப் பணிகளையும் நிறைவேற்றியதனால் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸ் "தூத்துக்குடி மக்களின் தந்தை" என போற்றப்படுகிறார். அத்தகைய மாமனிதர் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸை போற்றும் வகையில் அவருக்கு தூத்துக்குடி மாநகராட்சியில் குவிமாடத்துடன் கூடிய முழு உருவச் சிலையுடன் மணி மண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசால் 13.11.2021 அன்று அறிவிக்கப்பட்டு 14.10.2022 அன்று உரிய அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

அதன்படி, தமிழ்நாடு அரசின் சார்பில், தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் 77.87 லட்சம் ரூபாய் செலவில் ராவ்பகதூர் குரூஸ் பர்னாந்தீஸுக்கு குவிமாடத்துடன் கூடிய மணி மண்டபத்தை நேற்று (14.11.2023) காலை 11.30 மணியளவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை தலைமைமைச் செயலகத்தில் இருந்து காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், திறப்பு விழா ஒத்திவைக்கப்படுவதாக நேற்று இரவு திடீரென அறிவிக்கபட்டது.

திறப்பு விழா ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் ஏதும் அரசு தரப்பில் தெரிவிக்கப்படவில்லை. குரூஸ் பர்னாந்து மணி மண்டபம் என அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று முடிந்த நிலையில், சிலை மட்டுமே திறக்கப்படும் என அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டதற்கு மீனவர்கள் அமைப்பு சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதால் சிறை திறப்பு விழா தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதற்கிடையே, குரூஸ் பர்னாந்து மணி மண்டப திறப்பு விழா நாளை காலை 10 மணிக்கு நடைபெறும் என்றும் சென்னையில் இருந்தபடி முதல்வர் ஸ்டாலின் காணொலி காட்சி மூலமாக மணி மண்டபத்தை திறந்து வைப்பார் என்றும் அதிகார்பூர்மாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி, மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!