கோவில்பட்டி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் இளைஞர் கைது!

கோவில்பட்டி அருகே ராணுவ வீரர் கொலை வழக்கில் இளைஞர் கைது!
X

ராணுவ வீரர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மாரிச்சாமி.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே ராணுவ வீரர் குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே உள்ள வெம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வேதமுத்து மகன் வேல்முருகன். இவர், கடந்த 2018 ஆம் ஆண்டு ராணுவத்தில் பணியில் சேர்ந்துள்ளார். ஜம்மு காஷ்மீர் பகுதியில் பணியாற்றி வந்த வேல்முருகன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஒரு மாத விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் மாடி அறையில் தூங்கிக் கொண்டிருந்த போது ராணுவ வீரர் வேல்முருகன் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே, கொலை நிகழ்ந்த இடத்துக்குச் சென்ற தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும், கொலையாளியை பிடிக்க துணை காவல் கண்காணிப்பாளர் லோகேஷ்வரன் தலைமையில் தனிப்படை அமைத்து அவர் உத்தரவிட்டார்.

போலீசார் நடத்திய முதல்கட்ட விசாரணையில். கொலை செய்யப்பட்ட ராணுவ வீரர் வேல்முருகனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த மாரிச்சாமி என்பவருக்கும் பெண் விவகாரத்தில் முன்விரோதம் இருந்து வந்ததாகவும், வெம்பூரில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் வைத்து கடந்த 15 ஆம் தேதியன்று இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக எட்டயபுரம் காவல் நிலைய போலீசார் கொலை மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனிடைய ராணுவ வீரர் வேல்முருகன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தலைமறைவாக காட்டுப்பகுதியில் பதுங்கி இருந்தாக மாரிச்சாமியை போலீசார் நேற்று இரவு கைது செய்தனர். கைதான மாரிச்சாமியிடம் தனிப்படை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், கொலை நிகழ்ந்த வெம்பூர் பகுதியில் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்கும் வகையில், காவல் துணை கண்காணிப்பாளர்கள் லோகேஸ்வரன் (மணியாச்சி), மாயவன் (ஸ்ரீவைகுண்டம்), உண்ணி கிருஷ்ணன் (சைபர் கிரைம்) ஆகியோர் தலைமையில் இருநூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!