ஊத்துப்பட்டி அரசுப் பள்ளியில் உலக யானைகள் தின விழா கொண்டாட்டம்
யானைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்திட மாணவர்கள் உறுதியேற்றுக் கொண்டனர்.
கோவில்பட்டி அருகே உள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் தேசிய பசுமைப்படை சார்பில் உலக யானைகள் தின விழா நடைபெற்றது.
உலகம் முழுவதும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி யானைகளை பாதுகாப்பதற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும் உலக யானைகள் தின விழா கடைபிடிக்கப்படுகிறது. ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதை முன்னிட்டு, யானைகளை பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்படும்.
மேலும், யானைகளை பாதுகாக்க அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் அதுதொடர்பாக உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளி, கல்லூரிகளில் உலக யானைகள் தின விழா கொண்டாடப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகேயுள்ள ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற உலக யானைகள் தின விழா நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு யானை முகம் கொண்ட முகமூடி அணிந்து காட்சியளித்தனர்.
மேலும், யானைகளை பாதுகாத்திடவும் யானைகளுக்கான வாழ்விடங்களை உருவாக்கிடவும், யானைகளுக்கு எதிரான செயல்களை தடுத்து நிறுத்தவும் மாணவ, மாணவிகள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார்.
சுற்றுச்சூழல் ஆர்வலர் முத்து முருகன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவி கீதா வரவேற்றார். தேசிய பசுமைப்படை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலகணேசன் உலக யானைகள் தின சிறப்புரையாற்றினார். இதில் உடற்கல்வி ஆசிரியர் சுரேஷ்குமார் உள்பட பள்ளி மாணவ மாணவிகள் பலர் கலந்துகொண்டனர். பள்ளி மாணவி கிரிஜா நன்றி கூறினார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu