ஜாதி, மத பிரச்னைகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்: கனிமொழி எம்.பி.

ஜாதி, மத பிரச்னைகளில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்: கனிமொழி எம்.பி.
X

கோவில்பட்டியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பெண்களுக்கு நல உதவிகளை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தமிழகத்தை அமைதி பூங்காவாக இருக்க வைக்கும் இயக்கம் திமுக தான் என்றார் கனிமொழி எம்பி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் எட்டயபுரம் சாலையில் உள்ள சத்யாபாமா கல்யாண மண்டபத்தில், கலைஞர் நுாற்றாண்டு விழாவை முன்னிட்டு, துாத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு திமுக தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலாளரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமை வகித்தார். திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, 128 பெண்களுக்கு இலவச தையல் இயந்திரங்களை வழங்கினார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசியதாவது:பெண்கள் முன்னேற வேண்டும் என்ற மையக் கருத்துடன் திமுக செயல்படுகிறது. வேறு எந்த மாநிலத்திலும் கடைப்பிடித்திடாத வகையில் அரசு பணிகளில் 30 சதவீதம் இடஒதுக்கீடு கொண்டு வந்து அடித்தளமிட்டவர் கருணாநிதி. பெண்களை மதிப்பதாக கூறிக்கொள்ளும் சிலர், மத்திய அரசு ஆட்சியில் இருக்கும், மணிப்பூரில் பெண்கள் எவ்வளவு கொடுமைப் படுத்தப்படுகிறார்கள், வன்முறைக்கு ஆளாகுகிறார்கள் என்பது தெரியும்.

மத, ஜாதி பிரச்னையில் பாதிக்கப்படுபவர்கள் பெண்கள்தான். ஜாதி, மத அரசியல் செய்யக்கூடாது. ஜாதி நமது பிள்ளைகளை அழித்துவிடும். நமக்குள் சண்டையை மூட்டிவிட நினைக்கிறார்கள். குஜராத், ஹரியானா, மணிப்பூர் சம்பவங்கள் தெரியும். மணிப்பூரில் மக்கள் வீட்டில் வாழாமல் முகாம்களில் வாழ்கின்றனர். பாதுகாப்பு இல்லை. மதத்தை வைத்து அரசியல் செய்கிறார்கள். தமிழகத்தை அமைதி பூங்காவாக இருக்க வைக்கும் இயக்கம் திமுகதான் என்றார் கனிமொழி எம்.பி.

நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர மன்ற தலைவர் கருணாநிதி , மாவட்ட ஊராட்சி துணை தலைவர் சந்திரசேகர், திமுக ஒன்றிய செயலாளர் முருகேசன், நகர்மன்ற உறுப்பினர்கள், திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
ai tools for education