‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்றுச் செல்ல, எம்எல்ஏ வலியுறுத்தல்

‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டியில் நின்றுச் செல்ல, எம்எல்ஏ வலியுறுத்தல்
X

தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என். சிங்கிடம், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ மனு அளித்தார்.

‘வந்தே பாரத்’ ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என, முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ வலியுறுத்தி உள்ளார்.

நாடு முழுவதும் பல்வேறு நகரங்களை இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை-திருநெல்வேலி இடையே ‘வந்தே பாரத்’ ரயில் விரைவில் இயக்கப்படும் என, தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருநெல்வேலியில் இருந்து சென்னைக்கு ‘வந்தே பாரத்’ ரயிலில் 6 மணி நேரத்தில் செல்ல முடியும் என்றும் மதுரை, திருச்சி ஆகிய ரயில் நிலையங்களில் மட்டுமே நின்றுச் செல்லும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், திருநெல்வேலியில் இருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டியில் ‘வந்தே பாரத்’ ரயிலை நின்றுச் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில், அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ, தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங்கை இன்று சென்னையில் சந்தித்து மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், விரைவில் திருநெல்வேலியில் இருந்து சென்னை வரை இயக்கப்பட உள்ள ‘வந்தே பாரத்’ ரயில், கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, கோரிக்கை வைத்தார்.

கோரிக்கை மனுவினை பெற்றுக் கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்த தென்னக ரயில்வே பொது மேலாளர் ஆர்.என். சிங், கோவில்பட்டி ரயில் நிலையம் அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் ரூ. 25 கோடி மதிப்பில் ஒப்பந்தம் நிறைவு பெற்று விரைவில் அடிப்படை வசதிகளுடன் மேம்படுத்தப்பட உள்ளது, என்ற தகவலையும் தெரிவித்துள்ளார்.

Next Story
மக்கள் தாங்கள் வரியை செலுத்த வேண்டும் என திருச்செங்கோடு நகராட்சி ஆணையா் வேண்டுகோள்!