கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர்களுக்கு ஏற்பட்ட சோதனை

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர்களுக்கு ஏற்பட்ட சோதனை
X

கோவில்பட்டியில் பாதிக்கப்பட்ட ஆட்டோ ஓட்டுநர்கள் ராமகிருஷ்ணன் மற்றும் சக்திவேல்.

கோவில்பட்டியில் மாற்றுத்திறனாளி ஆட்டோ ஓட்டுநர்கள் இருவர் தங்களது வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (36). மாற்றுத்திறனாளியான இவர் ஆட்டோ ஓட்டி வருகிறார். தொடக்கத்தில் லாரி டிரைவராக பணியாற்றிய சக்திவேலுக்கு விபத்தில் இடது கையை இழந்து விட்டார். வலது கையும் சற்று பாதிக்கப்பட்டு உள்ளது. இவருடைய மனைவியும் இறந்து விட்ட நிலையில், 2 பெண்குழந்தைகளை வளர்க்க வேண்டும். படிக்க வைக்க வேண்டும் என்பதற்காக கையை இழந்த போதிலும் தன்னம்பிக்கையுடன் ஆட்டோ ஓட்டி தொழில் செய்து வருகிறார்.

இதே போன்று லட்சுமிபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (60). இவரும் விபத்தில் ஒரு கால் இழந்த மாற்றுத்திறனாளி. இருந்த போதிலும் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் எதிரே தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சர்வீஸ் சாலை பகுதியில் நின்று வெளியூரில் இருந்து வரும் பயணிகளை சவாரி ஏற்றி தங்களது பிழைப்பினை நடத்தி வந்தனர்.

இந்நிலையில் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் பயணிகளை ஏற்றி, இறங்கி விடுவதால் விபத்து அதிகரித்து வந்த காரணத்தினால் தற்பொழுது தேசிய நெடுஞ்சாலையில் பயணிகளை ஏற்றி, இறங்கி விட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெளியூரில் இருந்து வரக்கூடிய ஆம்னி பஸ்கள், அரசு விரைவு பஸ்கள் மேம்பாலத்தின் கீழ் வழியாக சர்வீஸ் சாலைக்கு செல்கின்றன. இதனால் மேம்பாலத்தின் கீழ் பகுதியில் இளையரசனேந்தல் சாலையில் பயணிகளை ஏற்றி, இறங்கி செல்கின்றனர். இதையெடுத்து அப்பகுதியில் நின்று சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் பயணிகளை ஆட்டோவில் ஏற்றி இறக்கி விட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இதற்கு கூடுதல் பஸ் நிலையத்தில் ஆட்டோ வைத்திருப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருவது மட்டுமின்றி தங்களது சங்கத்தில் உறுப்பினராக சேர்ந்தால் மட்டுமே ஆட்டோ ஓட்ட முடியும் என்று கூறியதால் இருவரும் 5 ஆயிரம் கொடுத்து உறுப்பினராகி உள்ளனர். இருந்த போதிலும் மாற்றுத்திறனாளிகள் இருவரையும் கூடுதல் பஸ் நிலையத்தில் உள்ள சில ஆட்டோ டிரைவர்கள் இயக்க விடாமல் தடுத்து வருவது மட்டுமின்றி, காவல்துறையினரை வைத்து இருவரையும் ஆட்டோவை ஓட்டவிடாமல் தடுத்து உள்ளனர்.

இதனால் மாற்றுத்திறனாளிகள் சக்திவேல், ராமகிருஷ்ணன் இருவரும் ஆட்டோ ஓட்டி தங்களது பிழைப்பினை நடத்தமுடியாமல் பரிதவித்து வருகின்றனர். மாற்றுத்திறனாளிகளான தங்களுக்கு இந்த ஆட்டோ ஓட்டி கிடைக்கும் சொற்ப வருமானத்தில் தான் குடுபம்பத்தினை நடத்தி வருகிறோம், ஆனால் இதனை தடுக்கும் வகையில் கூடுதல் பஸ் நிலையத்தில் உள்ள சில ஆட்டோ டிரைவர்கள் சங்கம் என்ற பெயரில் வைத்து கொண்டு தங்களை ஆட்டோ ஓட்ட முடியமால் தடுத்து வருவதாகவும், கடந்த சில நாட்களாக ஆட்டோ ஓட்ட முடியவில்லை என்பதால் தங்கள் வருமானத்தினை இழந்து நடுத்தெருவில் நிற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் வருத்தத்ததுடன் தெரிவித்தனர்.

மேற்கு காவல் நிலைய போலீசாரும் தங்களை ஆட்டோ ஓட்ட விடமால் மிரட்டுவதாகவும் தெரிவித்த ஆட்டோ ஓட்டுநர்கள் ராகிருஷ்ணன் மற்றும் சக்திவேல் ஆகியோர் கோவில்பட்டி காவல் துணைக் கண்காணிப்பாளர் வெங்கடேஷிடம் மனு கொடுத்து உள்ளனர். உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்துள்ளதாகவும், தாங்கள் ஆட்டோ ஓட்டினால் தான் தங்களுடைய குடும்பத்தினை கவனிக்க முடியும் என்றும் மாற்றுத்திறனாளி ஆட்டோ டிரைவர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!