வறுமை முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது.. தூத்துக்குடி எஸ்பி மாணவர்களுக்கு அறிவுரை...

வறுமை முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது.. தூத்துக்குடி எஸ்பி மாணவர்களுக்கு அறிவுரை...
X

கோவில்பட்டி ஜிவிஎன் கல்லூரியில் நடைபெற்ற விழிப்புணர்வு முகாமில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.

வறுமை முன்னேற்றத்திற்கு தடையாக இருக்காது என மாணவர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அறிவுரை வழங்கினார்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வெற்றித்தமிழா மற்றும் ஜி.வி.என் கல்லூரி இணைந்து நடத்திய கல்லூரி மாணவர்களுக்கான போட்டித் தேர்வு குறித்த விழிப்புணர்வு முகாம் இன்று ஜி.வி.என் கல்லூரியில் வைத்து நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது:

உயர் பதவி வகிப்பவர்கள் பெரும்பாலானோர் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான சூழ்நிலையில் இருந்து சாதிக்க நினைத்து முன்னேறி வந்தவர்கள். நமது எண்ணங்கள் மிகவும் வலிமையானவை, ஆகவே நாம் நேர்மறையான எண்ணங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும்.


மாணவர்கள் அனைவரும் வரும் காலத்தில் என்னவாக ஆக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ, அதுவாகவே ஆகிவிடுவீர்கள். உயர் பதவியில் இருக்கும் பலர் தமிழ் வழி கல்வியிலேயே பயின்று சாதனை படைத்தவர்கள். வசதி வாய்ப்பின்மை, சுற்றி இருக்கும் சூழ்நிலை போன்ற எந்த காரணமும் உங்கள் முன்னேற்றத்துக்கு தடையாக இருக்காது.

முடியாது என்ற எண்ணம் மட்டுமே நமக்கு தடையாக இருக்கும். அவற்றை மாணவர்கள் தகர்த்தெறிந்து விட்டு, முடியும் என்று முயற்சி செய்தால் வெற்றி நம்மை தேடிவரும். மாணவர்களாகிய நீங்கள் நல்ல புத்தகங்களை வாங்கி படியுங்கள்.

நீங்கள் ஒவ்வொருவரும் வாழ்க்கையில் மன மகிழ்ச்சியுடன் இருக்க வேண்டும் என்றால் அது உங்களிடமே உள்ளது. அதற்குத் தேவையான உங்கள் நல்ல எண்ணங்களை வளர்த்துக் கொண்டு வாழ்க்கையில் நீங்கள் வெற்றியாளராக வரவேண்டும் என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பேசினார்.

நிகழ்ச்சியில், இந்திய தோல் ஏற்றுமதி கழகம் செயல் இயக்குநர் ராம செல்வம். மகாராஷ்டிரா மாநில கணக்காய்வுத் தலைவர் திருப்பதி வெங்கடசாமி, திருவனந்தபுரம் செய்தி மற்றும் மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குநர் பழனிசாமி, தமிழ்நாடு சிறுபான்மை நலத்துறை கருத்தாளர் ஆல்பர்ட் பெர்னாண்டோ, கோவில்பட்டி வருவாய் கோட்ட அலுவலர் மகாலெட்சுமி உட்பட பலர் தங்களது கருத்துகளை பதிவு செய்தனர்.

விழிப்புணர்வு முகாமிற்கான ஏற்பாடுகளை ஜி.வி.என் கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி, செயலாளர் மகேந்திரன், இணை பேராசிரியர் உமாதேவி ஆகியோர் செய்திருந்தனர். முகாமில், கல்லூரி மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story
கணித மேதை ராமானுஜன் பெயரில் பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் - வரி செலுத்துவோர் மக்கள் நல்வாழ்வு சங்கம்  வலியுறுத்தல்!