கோவில்பட்டியில் ரூ.10 லட்சம் கேட்டு கோயில் பூசாரி கடத்தல்.. போலீஸார் மீட்பு...
கோவில்பட்டியில் கடத்தப்பட்டு போலீஸாரால் மீட்கப்பட்ட கோயில் பூசாரி உமையலிங்கம்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே உள்ள இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் உமையலிங்கம் (34). இவர் விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் மனைவி மனிஷாவுடன் வசித்து வருகிறார். கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம் தென்றல் நகரில் உள்ள சாய்லிங்கா ஆலயத்தில் கோயில் பூசாரியாக உள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு கோயிலில் இரவு பூஜையை முடித்து விட்டு, உமையலிங்கமும், அவரது நண்பர் கோமதிராஜூம் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் பூசாரி உமையலிங்கத்தை வழி மறித்தனர்.
அந்த நேரத்தில் வேகமாக வந்த காரில் இருந்து இறங்கிய 4 பேருடன், மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் என 6 பேரும் சேர்த்து பூசாரி உமையலிங்கம் மற்றும் அவரது நண்பர் கோமதிராஜை சரமாரியாக தாக்கினர். உமையலிங்கத்தின் கை, கால்களை கட்டி காரின் பின் இருக்கையில் அமர வைத்துக் கொண்டு அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். இதுகுறித்து உமையலிங்கத்தின் மனைவி மனிஷாவிடம், கோமதிராஜ் தகவல் தெரிவித்தார். இதையடுத்து மனிஷா, கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதைத் தொடர்ந்து காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் தலைமையில், மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் கிங்ஸ்லி தேவானந்த், உதவி ஆய்வாளர் அரிகண்ணன் மற்றும் போலீஸார், பூசாரி கடத்தப்பட்ட பாண்டவர்மங்கலம் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர்.
கார் எண்ணை கொண்டு விசாரணை நடத்தியபோது, கார் சாத்தூர் அருகே நிற்பது தெரியவந்தது. இதற்கிடையே உமையலிங்கத்தின் மனைவிக்கு போன் செய்த மர்மநபர்கள் ரூ.10 லட்சம் தந்தால் தான், அவரை விடுவிப்போம் என்று மிரட்டி உள்ளனர்.
இதையடுத்து போலீஸாரின் அறிவுரைப்படி மனிஷா, அந்த மர்மநபர்களை செல்போனில் தொடர்பு கொண்டு பணம் தருவதாக கூறியபோது, கடத்தலில் ஈடுபட்டவர்கள் பணத்துடன ராஜபாளையத்துக்கு வரும்படி தெரிவித்து உள்ளனர். இதையடுத்து மனிஷாவும், கோமதிராஜூம் ராஜபாளையத்துக்கு சென்றனர்.
அங்கு பஜாரில் கார் வந்து நின்றதும், மறைந்திருந்த போலீஸார் காரை சுற்றிவளைக்க முயன்றனர். இதனை பார்த்து காரில் இருந்து 6 பேர் தப்பியோடினர். கார் ஓட்டுநர் மட்டும் சிக்கினார். உடனடியாக காரில் இருந்த பூசாரி உமையலிங்கத்தை மீட்ட போலீஸார் அவரை சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
கார் ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில் அவர் சிவகாசி லாயல் மில் காலனியை சேர்ந்த செந்தில் மகன் மனோகர்(24) என்பது தெரியவந்தது. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட காரும் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், பூசாரி உமையலிங்கத்தை 6 பேர் கும்பல் ரூ.10 லட்சம் கேட்டு கடத்தியது ஏன்? என்பது குறித்து மேற்கு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu