கோவில்பட்டி அருகே 1000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.. போலீஸார் நடவடிக்கை...

கோவில்பட்டி அருகே 1000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல்.. போலீஸார் நடவடிக்கை...
X

கோவில்பட்டி அருகே போலீஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட புகையிலைப் பொருள் மூட்டைகள்.

கோவில்பட்டி அருகே போலீஸார் மேற்கொண்ட வாகன தணிக்கையின்போது, காரில் கடத்தப்பட்ட 1000 கிலோ புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

வெளி மாநிலங்களில் இருந்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு தொடர்ந்து புகையிலைப் பொருட்கள் கடத்தப்படுவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் உத்தரவின்படி கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் வெங்கடேஷ் மேற்பார்வையில், கயத்தாறு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீஸார் நேற்று வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்.


கயத்தாறு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலைப்புதூர் சுங்கச்சாவடி அருகே போலீஸார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக சந்தேகத்திற்கிடமான முறையில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர். சோதனையின்போது, அந்த காரில் தென்காசி மாவட்டம் வி.கே. புதூர் பகுதியை சேர்ந்த சுடலை காந்தி (வயது 35) என்பவர் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்டவிரோத விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, போலீஸார் சுடலை காந்தியை கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்த 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுமார் 1000 கிலோ புகையிலை பொருட்கள் மற்றும் கடத்துவதற்கு பயன்படுத்திய காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர். இந்த சம்பவம் குறித்து கயத்தாறு காவல் நிலைய போலீஸார் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


தூத்துக்குடி மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை கடத்துவோர் கைது செய்யப்பட்டு குண்டர் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டு வருகின்றனர். இருப்பினும், புகையிலைப் பொருட்கள் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. எனவே, கூடுதல் தனிப்படை குழுவினர் அமைத்து புகையிலைப் பொருட்கள் கடத்தலை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags

Next Story
ai and future cities