கோவில்பட்டி செல்போன் கடையில் திருட்டு: போலீசார் விசாரணை

கோவில்பட்டி செல்போன் கடையில் திருடிய இளைஞர்கள். (சிசிடிவி பதிவு காட்சி)
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் அருகே அசோக் நகர் பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் என்பவரது மகன் முத்து கணேசன் செல்போன் கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு சென்றுள்ளார்.
இன்று காலை கடையை திறக்கும் பொழுது கடையின் ஷட்டர் பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக கடையை திறந்து உள்ளே சென்று பார்த்த பொழுது விலை உயர்ந்த ஸ்மார்ட் போன் ஸ்மார்ட் வாட்ச் சார்ஜர் உள்ளிட்ட மூன்று லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் திருடு போனது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது கடையின் ஷட்டரை உடைத்து நான்கு பேர் கடையில் உள்ள பொருட்களை தேடி விட்டு தெருவில் ஜாலியாக நடந்து செல்வது சிசிடிவியில் பதிவாகியுள்ளது.சிசிடிவி காட்சிகளைக் கொண்டு கோவில்பட்டி மேற்கு காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவில்பட்டி நகர் பகுதிகளில் இரவு நேரங்களில் தொடர் திருட்டு சம்பவம் அரங்கேறி வருகிறது. இரவு நேரங்களில் ரோந்து காவலர்கள் கூடுதலாக பணியில் அமர்த்தபடாததால் இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று வருவதாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கூறி வருகின்றனர்.
மேலும், இந்த திருட்டு சம்பவத்தில் வெளிமாநில இளைஞர்கள் ஈடுபட்டிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அந்த கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தொடர் திருட்டு சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்துப் பணிகளை காவல் துறை அதிகரிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu