கோவில்பட்டியில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களை தடுத்த போலீசார்

கோவில்பட்டியில் ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களை தடுத்த போலீசார்
X

கோவில் பட்டியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க முயன்ற வழக்கறிஞர் அய்யலுசாமியை பிடித்துச் சென்ற போலீசார்.

கோவில்பட்டியில் கந்துவட்டி பிரச்சினை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுக்க வந்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி‌ கிருஷ்ணாநகரில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இன்று நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சேர்க்கை சிறப்பு முகாமில் மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி கலந்து கொண்டார். இந்நிலையில் கந்து வட்டி பிரச்னை தொடர்பாக மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க கடம்பூர் பகுதியைச் சேர்ந்த ராணி மற்றும் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வடக்கு மாவட்ட துணைத் தலைவரான வழக்கறிஞர் அய்யலுச்சாமி ஆகியோர் ஒரு ஆட்டோவில் கல்லூரிக்கு வந்தனர்.

அப்போது அங்கு காவல் பணியில் ஈடுபட்டிருந்த கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தினர். ராணி கந்துவட்டியால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், கடம்பூர் காவல் நிலைய போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இதுகுறித்து ஆட்சியரிடம் மனு மட்டும் அளிக்க உள்ளதாகவும் அதற்கு மட்டும் அனுமதிக்க வேண்டும் என்று இருவரும் கேட்டனர்.

ஆனால், காவல்துறையினர் இருவரையும் தடுத்து நிறுத்தியது மட்டுமின்றி, வலுக்கட்டாயமாக இருவரையும் ஆட்டோவில் ஏற்ற முயன்றனர். ஆட்டோவில் ஏற வழக்கறிஞர் அய்யலுச்சாமி மறுத்ததால், போலீசார் அவரை வலுக்கட்டாயமாக தூக்கி ஆட்டோவில் திணித்து மேற்கு காவல் நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர், மனுக்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அலுவலகத்தில் தான் கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருவரையும் சிறிது நேரத்தில் விடுவித்தனர். கந்து வட்டி பிரச்னை தொடர்பாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் ராணி, மாவட்ட ஆட்சியர் முன்பு தீக்குளிக்க உள்ளதாக தகவல் கிடைத்ததால், வேறு ஏதும் பிரச்னை ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக இருவரையும் அங்கிருந்து அப்புறப்படுத்தியதாக போலீசார் தரப்பில் கூறப்படுகிறது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!