கோவில்பட்டியில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை துவக்கி வைத்தார் அமைச்சர்
கோவில்பட்டியில் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளோடு அமைச்சர் கீதாஜீவன் உணவு அருந்தினார்.
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் மாணவ மாணவிகளுக்கான காலை உணவுத்திட்டம் இன்று விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்தத் திட்டத்தை நாகை மாவட்டம் திருக்குவளையில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை துவக்கி வைத்தார்.
அதனை தொடந்து அந்தந்த மாவட்டங்களில் உள்ள அமைச்சர்கள் பள்ளிகளில் காலை உணவுத்திட்டத்தை தொடங்கி வைத்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு காலை உணவு திட்டத்தை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதா ஜீவன் தொடங்கி வைத்து அந்தக் குழந்தைகளுடன் உணவு அருந்தினார்
தொடர்ந்து, அமைச்சர் கீதாஜீவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழகம் முழுவதும் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் காலை உணவுத்திட்டம் இன்று விரிவுபடுத்தப்பட்டு உள்ளது. முதல்கட்டமாக 1545 பள்ளிகளில் 1,14,000 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் மதுரையில் இந்தத் திட்டத்தினை முதல்வர் தொடங்கி வைத்தார்.
தற்போது மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்பட்டுள்ள நிலையில், இந்தத் திட்டத்தால் மாணவர்களின் கல்வித் திறன், மாணவர்கள் பள்ளிக்கு வருகை அதிகரிப்பு, பெற்றோர்களின் பணி சுமை குறைவு, மாணவ மாணவிகளுக்கு ஊட்டச்சத்துள்ள காலை உணவு கிடைக்கிறது. இதனால் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் சூழல் உருவாகி உள்ளது
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 589 தொடக்கப் பள்ளிகளில் 20962 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையிலும் தமிழகம் முழுவதும் 31,008 பள்ளிகளில் 15,45,000 பயன் பெற உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இந்தத் திட்டத்தை அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் கொண்டு வருவதற்கு முதல்வர் முயற்சி மேற்கொள்வார் என அமைச்சர் கீதாஜீவன் மேலும் தெரிவித்தார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu