‘தாலிய கழட்டுவேன்’ -கோவில்பட்டி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் ஆவேசம்
கோவில்பட்டி நகராட்சி கூட்டம் தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சியின் மாதாந்திர சாதாரண கூட்டம் கூட்ட அரங்கில் இன்று நகர் மன்ற தலைவர் கருணாநிதி தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கமலா முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பலர் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தின்போது, தினசரி சந்தை கடைகள் இடித்த போது அதில் பழுதடைந்த பொருட்கள் ஏலம் இடுவது தொடர்பாகவும், நகராட்சிக்குட்பட்ட கட்டணக் கழிப்பிடம் டெண்டர் விடுவது, நகராட்சியோடு 7 ஊராட்சி இணைத்து விரிவாக்கம் செய்தல் தொடர்பாகவும் 14 தீர்மானங்கள் முன்வைக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் 22 வது வார்டு தி.மு.க. நகர்மன்ற உறுப்பினர் ஜாஸ்மின் லூர்து மேரி பேசிய போது, தனது வார்டில் குடிநீர் திட்டப் பணிகளை உடனடியாக நிறைவேற்றித் தர வேண்டும். போதிய நிதி இல்லாத காரணத்தால் அந்தப் பணி தொய்வடைந்து உள்ளது..குடிநீர் பிரச்னையை தீர்க்க நிதி இல்லை என்றால் எனது வார்டு மக்களுக்காக என் தாலி செயினை கூட கழற்றி தர தயாராக இருக்கிறேன் என் மக்களுக்கு தண்ணீர் வேண்டும் என ஆவேசமாக பேசினார்..
அப்போது, உணர்ச்சிவசப்பட்டு இந்த மாதிரியாக தவறுதலாக பேசக்கூடாது என நகர்மன்றத் தலைவர் கருணாநிதி அறிவுறுத்தினார்
மேலும், 32 வது வார்டு அதிமுக நகர்மன்ற உறுப்பினர் கவியரசன் பேசும் பொழுது, பாரபட்சம் இல்லாமல் நகர் மன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற வேண்டும். தங்கள் வார்டுகளில் மட்டும் ஏன் எந்த நலத்திட்ட பணிகளையும் தொடங்கவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்புகின்றனர் என்று பேசினார். தொடர்ந்து, பல்வேறு கவுன்சிலர்கள் தங்களது கோரிக்கைகள் குறித்து பேசினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu